- செய்திகள்

ஜோக்கர் படத்துக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை -டைரக்டர் ராஜூ முருகன்…

ராஜூமுருகன் இயக்கிய `ஜோக்கர்' படம் வெற்றி பெற்று திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. படத்தின் வெற்றிவிழா சந்திப்பில் ராஜூமுருகன் உற்சாகமாக காணப்பட்டார். விழாவில் அவர் பேசியதாவது. “நான் இயக்கிய குக்கூ அழகான காதல் கதை. ஜோக்கர் சமூக அவலங்களை பேசும் படம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  நிறைய தயhரிப்பாளர்கள் என்னை படம் இயக்க அழைக்கிறார்கள். தற்போது அடுத்த கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை முடித்த பிறகே எந்த தயாரிப்பாளருக்கு படம் பண்ணுகிறேன் என்பதை சொல்ல முடியும். எனது குருநாதர் லிங்குசாமி அவர்கள் ஜோக்கர் படம் பார்த்து விட்டு `ராஜூ முருகன் என் உதவியாளராக இருந்தவர் என்பது பெருமை. அவர் என்னிடம் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை' என்று கூறியிருந்தார். அது அவரது பெருந்தன்மை. உண்மையில் நான் அவரிடம் பணியாற்றிய காலத்தில் அவரிடம் கற்றுக் கொண்டது ஏராளம். படம் பார்த்து விட்டு யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எந்த வித மிரட்டலும் வரவில்லை. நான் விரும்பும் அரசியல் தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு அய்யா அவர்கள் ஜோக்கர் படம் பார்த்து விட்டு `விதைத்துக் கொண்டே இருப்போம். முளைத்தால் மரம். இல்லையேல் உரம்' என்று எனக்கு ஒரு அழகிய வாசகம் பரிசளித்தார். மறக்க முடியாத பாராட்டு அது. `சமூக அவலங்களுக்கு எதிரான மிகச் சரியான படம்' என்று சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் பாராட்டு தெரிவித்தார். திருமாவளவனும் மனம் விட்டு பாராட்டினார். சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் `ரொம்ப ரொம்ப தில்லான படம். வாழ்த்துகள். நாம நிச்சயம் சந்திப்போம் என்று வாழ்த்தியிருந்தார். நானும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.' என்றார்.

விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், இயக்குனர் லிங்குசாமி மற்றும்  படக்குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply