- செய்திகள், விளையாட்டு

ஜோகோவிக், செரினாவுக்கு விளையாட்டுக்கான `ஆஸ்கர்' விருது

 

பெர்லின், ஏப்.20:-
இந்த ஆண்டின் உலகின் தலை சிறந்த வீரருக்கான விருதை செர்பியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக்கும் தலை சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸும் பெற்றுள்ளனர்.

உலக அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பெர்லினில் உள்ள லாரெஸ் ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது விளையாட்டுத் துறையைப் பொருத்தவரை ஆஸ்கர் விருதுக்கு சமமானதாக கருதப்படுகிறது.

நோவாக் இந்த விருதை 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இந்த விருதைப் பெறுகிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருதைப் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிக். அத்தோடு கடந்த ஆண்டு நடைபெற்ற மற்றொரு கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அதில் அவர் தோல்வி கண்டார்.
விருது கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோகோவிச், தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் இந்த விருதை தலை சிறந்த கால்பந்து வீரர் ஜோகன் கிரயூப் மற்றும் சிறந்த கார் பந்தய வீரர் நிக்கி லௌடாவுக்கு அர்ப்பணிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விருதுக்கான வீரர் பட்டியலில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும் 5-வது முறையாக இடம் பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு விருது கிட்டவில்லை. நேற்று முன் தினம் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ஜோகோவிக்குக்கு பார்முலா ஒன் கார்பந்தய வீரர் நிகோ ரோஸ்பெர்க் விருதை வழங்கினார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்ற செரினா கடந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றார். அவரும் மூன்றாவது ஆண்டாக உலகின் தலை சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெறுகிறார். செரினா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply