- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் ஆந்திராவிலிருந்து 10 தமிழர்கள் ஜாமீனில் விடுவிப்பு தமிழக அரசு தகவல்

சென்னை, பிப்.26-
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 10 தமிழர்கள், முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை காரணமாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

ஆன்மிக சுற்றுலா
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் ஆன்மிக சுற்றுலா சென்ற போது, திருவண்ணாமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் சித்தூர் மாவட்டம் ரங்கம்பட்டி சுங்கச் சாவடியில் ஆந்திர செம்மரக் கடத்தல் பிரிவு வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 16-ந் தேதி முதல் சித்தூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.  இவர்களது உறவினர்கள் சித்தூர் சிறையில் உள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஜாமீனில் விடுதலை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு வழக்கறிஞர்கள் அருள் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரை திருப்பதிக்கு அனுப்பி, சிறையில் உள்ள தமிழர்களை பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அரசு வழக்குரைஞர்கள், திருப்பதியில் உள்ள வழக்கறிஞர்களுடன் இணைந்து சித்தூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். நேற்று (25-ந் தேதி) திருப்பதி 5 வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் இந்த 10 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க உத்திரவிட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை காரணமாக தூத்துக்குடியைச் சேர்ந்த 10 தமிழர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply