- செய்திகள்

ஜல்லிக்கட்டு வழக்கு இறுதி விசாரணை தொடங்குகிறது சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 23-ந் தேதி…

புதுடெல்லி, ஜூலை.27-

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த வழக்கில் அடுத்தமாதம்  (ஆகஸ்ட்)  23-ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை

தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியம் குற்றம்சாட்டியது. மேலும், காளைகளை ஜல்லிக்கட்டுப் போட்டியில் பயன்படுத்துவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

அந்த வழக்கில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி தீர்ப்பளித்தது.
இதனிடையே தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மீண்டும் விசாரணை

இந்த வழக்கு விசாரணையில் பதிலளிக்க மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகிந்தன் நாரிமன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது குறித்து மத்திய அரசு பதிலளித்தது.

குழந்தை திருமணம்

அதில் ஜல்லிக்கட்டு விளையட்டு என்பது மிகப்பழமை வாய்ந்தது. மேலும் முற்காலத்தில் இருந்தே நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பாரம்பரியம் வாய்ந்து. அதனால் தான் அனுமதி வழங்கியதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை திருமணம் கூட பழமை வாய்ந்தது தான், அதற்கும் அனுமதி வழங்க முடியுமா? முற்காலத்தில் குழந்தை திருமணம் பாரம்பரியமாக நடந்து வந்தது. அதை தற்போது நடைமுறையில் நியாயப்படுத்த முடியுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து வருகிற  23-ந் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க கூடுதல் அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

Leave a Reply