- செய்திகள், விளையாட்டு

ஜப்பானை வீழ்த்தியது இந்தியா சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி

இபோ, ஏப். 7:-

மலேசியாவில் நேற்று தொடங்கிய 25-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது இந்திய அணி.

25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா, ஜப்பான் ஆகிய 7 அணிகள் பங்கேற்கின்றன.

முதல்நாளான நேற்று  சர்தார் சிங் தலைமையிலான இந்தியாவை எதிர்கொண்டது ஜப்பான் அணி.  கோல் கணக்கை முதலில் தொடங்கி ஜப்பான் அணி முந்திக்கொண்டது.  17-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரில் ஜப்பான் வீரர் கென்ஜி கிடாஜாட்டோ கோல் அடித்து 1-0 என அணியை முன்னிலை பெறச்செய்தார்.

இதையடுத்து இந்திய வீரர்கள் முன்னேறிச் சென்றனர். இருமுறை கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். ஆனால், 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக்கி 1-1 என சமன் செய்தார். அதன் பின் வேகம் காட்டிய இந்திய அணியின் கேப்டன் சர்தார் சிங் 32-வது நிமிடத்தில் 2-வது கோல் அடித்து அணியை 2-1 என்று முன்னிலை பெறச் செய்தார்.

ஆனால், இறுதிவரை ஜப்பான் அணி மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியஅணி.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் கனடா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி. அந்த அணியின் முகமது அர்ஸ்லான் காதிர் 2 கோல்களும், முகமது அர்சத் ஒரு கோலும் அடித்தனர்.

பாக்ஸ் மேட்டர்…..
இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டை
இந்திய ஆக்கி அணி வீரர் மன்ப்ரீத் சிங்கின் தந்தை போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு மரணமடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும், மன்ப்ரீத் சிங் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, சகவீரரின் தந்தை இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீரர்கள் கையில் கருப்புபட்டை அணிந்து விளையாடினர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply