ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்…!

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ளது.  மக்களாட்சியின் ஆணிவேரே இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் இருந்துதான் தொடங்குகிறது.  கடந்த காலங்களில் இந்த உள்ளாட்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்கள்தான் அரசியல் உலகில் மிகப்பெரும் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு இந்த உள்ளாட்சி அமைப்புகள்தான் முன்னோட்டமாக… முதல் படிநிலையாக இருந்தது.

ஆனால், தற்போது இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குரிமையை, தமிழகத்தில் சில இடங்களில் கிராம மக்கள் முன்னிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விடுகின்ற வகையில், தலைவர் பதவிக்கு 50 லட்சம் எனவும் துணைத் தலைவர் பதவிக்கு 15 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு, ஒரு ஊரில் இதனடிப்படையில் தலைவர் பதவி ஏலத்தில் எடுக்கப்பட்டுவிட்டுதாக செய்திகள் வந்துள்ளன.  தேர்தலில் மறைமுகமாக வாக்கிற்கு பணம் வழங்குவதே சட்டப்படி குற்றம் என்கிறபோது, ஒட்டு மொத்தமாக உள்ளாட்சி பதவிகளையே ஏலம் விடுவது, அந்த கிராம மக்களின் குற்றம் என்பதைவிட அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.

ஏலத்தின் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை கட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் எப்படி மக்களின் நலனுக்காக நேர்மையுடன் செயல்படுவார்? மேலும் உரிமையுடன் தலைவரை அணுகி எப்படி மக்கள் நலனுக்கான கோரிக்கைகளை வைப்பது என்றெல்லாம்  சிந்திக்க முடியாத மக்கள்தான் இத்தகைய ஏல முறைக்கு ஒப்புக் கொள்கிறார்கள்.  அனைவருக்குமான வாக்குரிமை என்கிற மக்களாட்சி முறை வானத்தில் இருந்து வந்ததல்ல! ஏராளமான மக்களின் உயிர் தியாகத்தால்தான் இந்த ஜனநாயகத் தேர்தல் முறை தோன்றியது.

உலகம் முழுவதிலும் மக்களாட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் ஆட்சிதான் நடைபெற்றது.  இதில் 90 விழுக்காடு ஆட்சி என்பது மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோண்மை முறையில்தான் இருந்தது.  மன்னர் என்ன நினைக்கிறாரோ அதுதான் சட்டம்.  மக்களின் வாழ்வாதார நிலை உள்ளிட்ட எதுவும் மன்னராட்சியில் யாரிடமும் எந்தக் கேள்விகளும் கேட்க முடியாது. அப்படி மன்னரை யாராவது கேள்வி கேட்டு எதிர்த்தால், கேள்வி கேட்பவரின் உடம்பில் தலை இருக்காது அல்லது வாழ்நாள் முழுவதும் பாதாளச் சிறைவாசம்தான்.  இப்படிப்பட்ட மன்னராட்சிகளின் பிடிகளிலிருந்து படிப்படியாக மக்களின் புரட்சிகள்  மூலம் உருவானதுதான் மக்களாட்சி.  இதில் லூயி மன்னனை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிதான் உலக மக்களுக்கு வழிகாட்டியது.

மக்களுக்கான ஆட்சி முறைகளில் ஓரளவு குறைகள் அதிகம் இல்லாத ஆட்சி அமைப்புதான் நம் ஜனநாயக ஆட்சிமுறை.  நாட்டில் இருக்கும் மக்களின் கையில் அதிகாரத்தை வழங்கி, அதனை வாக்குச்சீட்டு மூலம் பயன்படுத்தி அதன் மூலம் தேர்வாகிறவர்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் நடைமுறைதான் தேர்தல் ஜனநாயகமுறை.  இந்த அமைப்பில் வாக்குரிமை கொண்ட அனைவருமே மக்களாட்சியின் மன்னர்கள்.  அதனால்தான் அரசியல்வாதிகள் வீடு வீடாக பவ்யமாக வணங்கி வாக்குகளைச் சேகரிக்கின்றனர். இப்படி அனைவருக்குமான வாக்குரிமை கூட படிப்படியாகத்தான் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது.

வாக்களிக்கும் தகுதி முதலில் இந்தியாவில், படித்துப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சொத்துவரி கட்டுபவர்கள் என ஒரு வரையறைக்குள்தான் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு இருந்தது.  அந்த வகையில் இந்திய விடுதலைக்கு முன்னர் சென்னை மாகாணத்தில்தான் முதன் முதலில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டதும் வரலாறு.   இந்த வழிகாட்டுதல்தான் இந்தியா விடுதலை பெற்ற பிறகு 21 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என அன்றைய பிரதமர் நேரு அவர்களால் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவே தேர்தல் ஆணையத்தாலும் ஏற்கப்பட்டது.  அனைவருக்குமான வாக்குரிமை என்பது ஆபத்தான முறை என்று அன்றைக்கு இங்கிலாந்து அரசாங்கம் நேருவை எச்சரித்தது.  என் நாட்டு மக்கள் ஆய்தறிந்து தகுதியான நபரைத்தான் தேர்தல் மூலம் தேர்வு செய்வார்கள் என பதில் தந்தார் நேரு.  பிறகு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

இப்படி வளர்ச்சி பெற்றதுதான் நாம் வாக்களிக்கும் தேர்தல் ஜனநாயக முறை, இந்த உரிமையினை விற்பது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.  யானை தன் தலை மீது மண்னை அள்ளிப் போட்டுக் கொண்ட கதைதான் இது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *