- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சொத்து விவரங்களை மறைக்கும் வேட்பாளருக்கு 6 மாதம் ஜெயில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டி

சென்னை, ஏப்.19-
‘‘வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் சொத்து விவரங்களில், சொத்துக்களை குறைவாக  மதிப்பிட்டுக் காட்டினாலும், இருக்கின்ற சொத்து விவரங்களை மறைத்தாலும் அந்த  வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இத்தகைய குற்றத்தில் ஈடுபடும் வேட்பாளருக்கு  6 மாதம் ஜெயில் அல்லது அபராதம் அல்லது சிறை தண்டனையும், அபராதமும் சேர்த்து  விதிக்கப்படும்’’ என்று, ராஜேஷ் லக்கானி கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. 22-ந் தேதியில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் 12 பேர் தமிழகம் வர உள்ளனர். தேர்தல் பார்வையாளர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால், தமிழில் புகார் கூறுவது சாத்தியமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் பார்வையாளர்களுடன், தமிழில் மொழி பெயர்த்து கூறுவதற்காக தமிழக அரசு அதிகாரி ஒருவர் உடன் இருப்பார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கும் 22-ந் தேதி, தேர்தலுக்கான அறிவிப்பாணை முறைப்படி வெளியிடப்படும். எனவே, 22-ந் தேதிக்குப் பிறகுதான், தமிழக அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். அதற்குப் பிறகு, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
சிறை தண்டனை-அபராதம்
வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தங்களின் சொத்துக்கணக்குகளை ‘அபிடவிட்’டில் தாக்கல் செய்வது வழக்கம் ஆகும். வேட்பாளர்கள் அளித்த சொத்து கணக்கு விவரம் சரியானதுதானா என்பதை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். சொத்து வாங்க பணம் எப்படி வந்தது என்று விசாரிப்பார்கள்.
வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் சொத்து விவரங்களில் சொத்துக்களை குறைவாக மதிப்பிட்டுக் காட்டினாலும், இருக்கின்ற சொத்து விவரங்களை மறைத்தாலும் அந்த வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 125-ஏ வின்படி, இத்தகைய குற்றத்தில் ஈடுபடும் வேட்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறை தண்டனையும், அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.
மே 14-ந் தேதி….
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மே 16-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு 48 மணி நேரம் முன்னதாக, மே மாதம் 14-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது. மே 14-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் யாரும் மொத்தமாக ‘பல்க் எஸ்.எம்.எஸ்.’ அனுப்பக் கூடாது. ரேடியோ, தனியார் டி.வி. சானல்கள், வாய்ஸ் எஸ்.எம்.எஸ். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் என எந்த ஊடகம் வழியாகவும் பிரசாரம் செய்யக் கூடாது.
தேர்தல் பார்வையாளர்கள், செலவுக் கணக்கு பார்வையாளர்கள், வருமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் தமிழக சட்டசபை தேர்தல் பணியில் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, 400 அதிகாரிகளுக்கு இன்று டெல்லியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

Leave a Reply