- செய்திகள்

சேகர்பாபு பேச்சுக்கு அமைச்சர்கள் பதிலடி சட்டசபையில் கடும் வாக்குவாதம்-அமளி…

சென்னை, ஜூலை.29-
தி.மு.க. எம்.எல்.ஏ பி.கே.சேகர்பாபு பேச்சுக்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவையில் அமளி நிலவியது.
சேகர்பாபு பேச்சு
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசினார். அவர் பேச்சை தொடங்கும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய சேகர்பாபு துறை வாரியாக பேச தொடங்கியதும் அதற்கு அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்வதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். அவ்வப்போது அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அறநிலையத்துறையில்
தொடர்ந்து சேகர்பாபு பேசும் போது, ‘‘பழனி கோவில், சோளிங்கர் கோவில் ரோப்கார் திட்டம் அந்தரத்தில் உள்ளதாகவும், அறநிலையத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் கேள்வி எழுப்பினார். அறநிலையத்துறை ஆணையராக இருந்தவர் பணி ஓய்வு பெற்ற பின் மீண்டும் அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ஆட்சியில் ஓய்வு பெறுபவர்களே மீண்டும் பணிக்கு வரும் நிலை உள்ளது’’ என்றார்.
`ஈரை பேன் ஆக்கி'
அப்போது  அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, ‘‘சேகர்பாபு ஒவ்வொரு வி‌ஷயத்தையும் புரட்டி புரட்டி போட்டு பேசுகிறார். பணி நீட்டிப்பு என்பது தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படவில்லையா? இது எல்லா ஆட்சியிலும் உள்ள நடைமுறைதான். சேகர்பாபு சின்ன வி‌ஷயத்தை கூட பெரிதாக்குபவர். "ஈரை பேன் ஆக்கி பூதாகரமாக ஆக்குகிறவர்’’ என்றார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து சேகர்பாபு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த போது சட்டசபையில் என்ன பேசினார் என்பதை அவைக்குறிப்பு புத்தகத்தில் உள்ளவற்றை வாசித்தார்.
2005-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி அ.தி.மு.க.வில் இருந்த சேகர்பாபு, மகளிர் சுய உதவிக்குழு பற்றி பேசும் போது, ‘‘புரட்சித் தலைவி அம்மாவை புகழ்ந்து பேசியதுடன் அம்மா கொண்டு வரும் திட்டமெல்லாம் புதுமையான புரட்சிகரமான திட்டமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார். அதே சேகர் பாபு இன்று எப்படி மாற்றி பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இங்கிருக்கும் போது ஒரு பேச்சு, அங்கிருக்கும் போது ஒரு பேச்சு. எனவே நாளைக்கு என்ன பேசுவார் என்று தெரியாது. அவர் விசுவாசமாக இருப்பாரா? நாளை அவர் எப்படியோ’’ என்றார்.
(உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜு பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்).
விசுவாசம்
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-உறுப்பினர் சேகர்பாபு அப்போது பேசியதை தவறு என உணர்ந்த காரணத்தால்தான் இன்று எங்களிடம் உள்ளார். அவரது விசுவாசத்தை பற்றி அமைச்சர் சந்தேகப்பட தேவையில்லை. நிச்சயமாக விசுவாசமாகத்தான் இருப்பார்.
அமைச்சர் செல்லூர் ராஜு:-சேகர்பாபு யார் என்று தெரியாத நிலையில் அவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எங்கள் அம்மா. எங்களிடம் இருந்த போது புரட்சித் தலைவி அம்மாவை பற்றி புகழ்ந்து பாராட்டி எத்தனை பக்கம் பேசினார். தெரியுமா? அவரது பேச்சு எல்லாமே பக்கம் பக்கமாக அவைக்குறிப்பில் உள்ளது. அவற்றையெல்லாம் படித்து சொல்ல நேரம் போதாது. எனவே அவரிடம் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது.
தி.மு.க. எதிர்ப்பு
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:-சேகர்பாபுவுக்கு சான்றிதழ் தந்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இதே அவையில் அவர் எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) பற்றி என்ன பேசினார் என்று ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன். (இதற்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும், தி.மு.க.வினரின் செயல்களுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர்).
சபாநாயகர்:- சேகர்பாபு பேசியதற்கு பதில் சொல்லி அவை முன்னவரை பேச விடுங்கள். ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்.
ஓ.பன்னீர்செல்வம்:- 2005-ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சேகர் பாபு சட்டசபையில் பேசியதை இப்போது வாசிக்கிறேன். இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சென்று எங்களை சிறைக்கு அனுப்புங்கள் என்று போலீசாருடன் மல்லுகட்டியதுடன் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை தனது வலது முழங்கையால் அவரது மார்பில் இடித்து முழு பலத்தோடு அவரை பின்னுக்கு தள்ளினார் என்று சேகர்பாபு பேசியுள்ளார்.
(இதற்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சேகர் பாபுவின் பேச்சை ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க கூடாது என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்).
துரைமுருகன் பேச்சு
துரைமுருகன்:- தி.மு.க.வினர் அங்கு வருவதும் அ.தி.மு.க.வினர் இங்கே வருவதும் வழக்கமாக நடந்து கொண்டிருப்பதுதான். எனவே அப்போது பேசியவற்றை இப்போது எடுத்து சொன்னால் அது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என பயப்படுகிறேன்.
தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு சென்றவர்கள் முன்பு என்ன பேசினார்கள் என்பதை எங்களாலும் திருப்பி சொல்ல முடியும். நீங்கள் இப்படி வாசித்தால் காளிமுத்து போன்றவர்கள் பேசியதை நாங்கள் திருப்பி சொல்ல வேண்டியது வரும். இது இந்த அவைக்கு நல்லதல்ல.
நீங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தால் அதே உரிமையை எங்களுக்கும் தர வேண்டும். (இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பழையவற்றை பேசாமல் அமர்ந்துவிட்டார்).
தவறாக சொல்லவில்லை
செல்லூர் ராஜு:- நாங்கள் தவறாக அவரை சொல்லவில்லை. நாங்களே ஏமாந்து போய் விட்டோம். எனவே அவரது (சேகர்பாபு) பேச்சை நாங்கள் சீரியசாக எடுக்கவில்லை.
(இதற்கு பதில் சொல்ல சேகர்பாபு வாய்ப்பு கேட்டார். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை. உடனே தி.மு.க.வினர் பேசவிடு பேசவிடு என்று சபையிலேயே கோ‌ஷமிட்டனர்).
சபாநாயகர்:- நான் காலையிலேயே சேகர்பாபுவிடம் 20 நிமிடத்துக்கு மேல் பேச முடியாது என்றேன். ஆனால் இப்போது மணி 11.16 ஆகிறது. எவ்வளவு நேரம்தான் பேச அனுமதி கொடுக்க முடியும்.
(தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து சேகர்பாபு பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். அதன் பிறகு சபாநாயகர் சேகர்பாபுவை பேச அனுமதித்தார்).
துணைவேந்தருக்கே பாதுகாப்பு இல்லை
சேகர்பாபு:- அமைதி, வளம், வளர்ச்சி என இந்த ஆட்சியில் கூறி உள்ளீர்கள். அமைதி பற்றி ஒரு கருத்தை சொல்கிறேன். முதல்-அமைச்சரை நேற்று இசைக்கல்லூரி துணைவேந்தர் வீணை காயத்ரி சென்று பார்த்துள்ளார். இந்த கல்லூரிக்கு வேந்தர் யார் என்றால் முதல்-அமைச்சர்தான். முதல்-அமைச்சர் வேந்தராக உள்ள இசைக்கல்லூரி அலுவலகத்தையே சிலர் சூறையாடி உள்ளனர். அங்குள்ள துணைவேந்தருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுதான் இன்றைய சட்டம்-ஒழுங்கு.
ஓ.பன்னீர்செல்வம்:- சேகர்பாபு அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வந்து விட்டார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முதல்-அமைச்சர் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறார். தமிழகத்தை அமைதிப்பூங்காவாக நிலைநிறுத்தி உள்ளார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Reply