- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

செல்போன் வெடித்ததால் பார்வை இழந்த சிறுவனுக்கு கண்பார்வை குறைபாடு சரிசெய்யப்பட்டது

சென்னை, பிப்.7-
செல்போன் வெடித்ததால் பார்வை இழந்த சிறுவனுக்கு, கருவிழி பொருத்தப்பட்டு, கண்பார்வை குறைபாடு சரி செய்யப்பட்டது. உடனடியாக சிகிச்சைக்கு உத்தரவிட்டதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அந்த சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இரு கண்களும் பாதிப்பு

செங்கல்பட்டைச் சார்ந்த தனுஷ் என்ற 9 வயது சிறுவன் ஜனவரி 29-ந் தேதி மின் இணைப்பில் இருந்த மொபைல்போனை உபயோகித்ததால் அது வெடித்து சிறுவனுடைய இருகண்களும் பாதிப்புக்குள்ளானது.  உடனடியாக சிறுவன் 108 ஆம்புலன்ஸ்  மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக அச்சிறுவன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் 30-ந் தேதி உயர் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அதிகாலை அனுமதிக்கப்பட்டான்.

பார்வையில் முன்னேற்றம்

அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுடைய வலது கண்ணின் கருவிழியில் காயம் அடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு   கண்தானம் மூலம் பெறப்பட்ட கருவிழி அச்சிறுவனுக்கு உடனடியாக பொருத்தப்பட்டது. தற்போது சிறுவனுக்கு வலது கண்ணில் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  மேலும், வலது கண் இமையில் ஏற்பட்ட காயமும் சரிசெய்யப்பட்டு, இடது கண்ணில் கிழிந்திருந்த வெள்ளைப்படலமும் சரிசெய்யப்பட்டது.  வலது கண்ணில் புரை இருப்பதினால் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  காயத்தினால் ஏற்பட்ட புரை நீக்கிய பின் வலது கண்ணிலும் பார்வையில்  முன்னேற்றம் ஏற்படும் என டாக்டர்கள் கூறினார்கள்.
ஜெயலலிதாவுக்கு நன்றி

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்து சிறுவனுடைய பார்வை குறைபாட்டை நீக்க உதவிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுவனுடைய பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply