- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

செல்போனில் புதிய ‘வாட்ஸ்-அப்’ எண், ‘செயலி’ அறிமுகம் தேர்தல் புகார்களை தெரிவிக்க நவீன வசதி

சென்னை, மார்ச் 8-
தேர்தல் விமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, புதிய நவீன வசதிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான, பிரத்யேக ‘வாட்ஸ்-அப்’ எண்ணையும், ‘செயலி’யையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16–-ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(4-ந் தேதி) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்றுவது, வாகனச் சோதனை, பறக்கும் படை ஆய்வு ஆகிய பணிகள் நடந்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், சென்னை எழும்பூரில் மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக (ஆர்.ஓ) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆலோசனை
ஒரு மாவட்டத்தக்கு இரண்டு அதிகாரிகள் வீதம் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 64 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டப்பிரிவு செயலாளர் வைல்ப்ரட்டும், நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினோம். தேர்தல் நன்நடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்தும், வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டுப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

‘ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்’ அறிமுகம்
தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்காக ‘ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘tnelection’ என்ற அந்த மொபைல் செயலியை ‘டவுண்ட் லோட்’ செய்து கொள்ளலாம். இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான தகவல்களையும், புகார்களையும் தெரிவிக்கலாம். ஏற்கனவே நடந்த சட்டசபை தேர்தல் விஷயங்களையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதையும் பார்த்துக் கொள்ளலாம். தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தால், ஓட்டளிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி முகவரியையும் அறிய முடியும். ஓட்டுச்சாவடிக்கு செல்வதற்கான ‘ரூட் மேப்’பையும் பார்க்க முடியும். தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிடும் அனைத்து செய்திக்குறிப்புகளும் இந்த செயலியில் பார்க்கலாம். ஆப்பிள் போன்களுக்கு இந்த மொபைல் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
‘வாட்ஸ்–அப்’ எண்
அதேபோல், தேர்தல் நடத்தை விதிகள் எந்த இடத்திலாவது மீறப்பட்டால் அது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க, 9444123456 என்ற பிரத்யேக ‘வாட்ஸ்–அப்’ எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தகவல்கள், புகார்களை அனுப்பலாம். புகார் தெரிவிக்க, ‘1950’ என்ற தொலைபேசி எண் வசதி ஏற்கனவே உள்ளதால், மேற்கண்ட ‘வாட்ஸ்- அப்’ எண்ணுக்கு ‘கால்’ செய்ய வேண்டாம். புகார்கள் தொடர்பான படங்கள், ஆவணங்களை அனுப்பலாம். ஆதாரப்பூர்வமாக வரும் ‘வாட்ஸ்–அப்’ புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும், இந்த எண்ணுக்கு புகார்கள், தகவல்கள் அனுப்பலாம்.
300-க்கும் அதிகமான புகார்கள்
தமிழகம் முழுவதும் இருந்து, நேற்றுமுன்தினம் மாலை ‘1950’ எண்ணுக்கு, 300–-க்கும் மேற்பட்ட விதிமுறை மீறல் புகார்கள் வந்துள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால் சட்டசபை அலுவலகங்களை திறக்கப்படகூடாது. தொகுதிகளில் உள்ள சட்டசபை அலுவலகங்கள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் அதிக பணம் கொண்டு செல்லும் போது உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். தேவையான ஆவணங்களை தாக்கல் செய்தால், பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் புதிதாக ஒப்பந்த புள்ளி கோருவதற்கு கட்டுப்பாடு உள்ளது. ஆனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று புதிய டெண்டர்கள் விடலாம். தினசரி பணிகளுக்கு துறை தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.
மத்திய அரசு விளம்பரம்
முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில், ஏற்கனவே அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை, அடையாள அட்டை வழங்க அனுமதி இல்லை. விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரியிடமிருந்து கோரிக்கை வந்தால், தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்.
பத்திரிகை, ‘டிவி.’களில் மத்திய அரசின் விளம்பரங்களும், பிற மாநில அரசுகளின் விளம்பரங்களும் வெளிவந்து கொண்டிருப்பதாக சொல்கிறீர்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், இந்த விளம்பரங்களை அனுமதிக்க முடியாது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.
மொய் விருந்து
திருமணம், மொய் விருந்து என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதாக சொல்கிறீர்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில், 100 ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை. ஒரு லட்சம் ரூபாய் போன்ற பெரும் தொகை கொடுத்தால், அது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கு பணம் தருகிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்கப்படும்.
தமிழகத்திலுள்ள அனைத்து வங்கிகளில் இருந்தும் தினமும் பண பரிவர்த்தனை பட்டியல் பெறப்பட்டு சோதிக்கப்படுகிறது. இதுதவிர பண பரிவர்த்தனை குறித்து வருமான வரித் துறை தனியாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
////////////////////////////////////
பாக்ஸ் செய்தி
தேர்தல் அதிகாரியின் விருப்பம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘தமிழகம் அனைத்து விஷயங்களிலும் முன்னணி மாநிலமாக உள்ளது. அதுபோன்று, சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிலும் அதிக ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். தமிழக சட்டசபை தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கோடை வெப்பம் காரணமாக ஓட்டுப்பதிவு குறையும் என்பதை ஏற்க முடியாது’ என்று கூறினார்.

Leave a Reply