- செய்திகள்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறப்பு : வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து நேற்று பிற்பகலில் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரி பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளவை எட்டி வருவதால் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியிருப்பதாவது:–

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்து வரும் மழையினால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகபடியாக உள்ளதால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 23 அடியை நெருங்குவதாலும், மழையின் காரணமாக ஏரியின் நீர் வரத்து அதிகமாக உள்ளதாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் பிற்பகல் 2 மணி அளவில் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு வரும் வெள்ள நீரின் அளவினை பொறுத்து படிப்படியாக அவ்வாறே வெளியேற்றப்படும்.

எச்சரிக்கை

எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்கும்படியும், மேலும் உபரிநீர் திறந்துவிடும் போது பொதுமக்கள் கரையோரம் நின்றோ, கூட்டமாக சென்றோ வேடிக்கை பார்க்கக் கூடாது என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புழல்

இதே போல் புழல் ஏரியிலிருந்தும் உபரி நீர் திறப்பதால், கால்வாய் கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புழல் ஏரியில் இருந்து பிற்பகலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் நீர் வரத்துக்கு ஏற்ப, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், சுற்றியுள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும். எனவே கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேடடுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியுள்ளார்.

Leave a Reply