- செய்திகள், தேசியச்செய்திகள், வணிகம்

சென்ற வார வர்த்தகத்தில் (வர்த்தகம்) கரடிக்கு பதிலடி கொடுத்த காளை சென்செக்ஸ் 953 புள்ளிகள் உயர்ந்தது…

மும்பை, ஏப்.16:-

தொடர்ந்து 2 வாரங்களாக சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் சென்ற வாரத்தில் ஏற்றம் கண்டது. அந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 953 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 295 புள்ளிகள் அதிகரித்தது.

3 தினங்கள்

அம்பேத்கர் ஜெயந்தி, ராமநவமி ஆகியவற்றை முன்னிட்டு கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பங்குச்  சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே சென்ற வாரத்தில் 3  தினங்கள் மட்டும் வர்த்தகம் நடைபெற்றது.

சென்ற வாரத்தில் தொழில்துறை உற்பத்தி, சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியானது. இந்த புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு வழி வகுத்தன. இந்த ஆண்டில் பருவமழை சிறப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. மேலும், சர்வதேச நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் சென்ற வாரத்தில் பங்கு வர்த்தகம் களை கட்டியது.

குறியீட்டு எண்

மும்பை பங்குச் சந்தையில் வாகனம், தொலைத்தொடர்பு, வங்கி, மின்சாரம் உள்பட அனைத்து துறைகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் பங்குகளின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது. அந்த பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.1.62 லட்சம் கோடி உயர்ந்தது.

கடந்த புதன்கிழமை இறுதி நிலவரப்படி, சென்ற வாரத்தில் சென்செக்ஸ் 3.86 சதவீதம் அதிகரித்து 25,626.75 புள்ளிகளிலும், நிப்டி 3.91 சதவீதம் ஏற்றம் கண்டு 7,850.45 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளது.

Leave a Reply