- சென்னை, செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

இந்த கட்டண குறைப்பு வரும் 22–ந் தேதி முதல் (திங்கட்கிழமை) அமுல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விடப்படுவதால் மெட்ரோ ரெயில் திட்டம் – I முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. முடிவடைந்த முதல் கட்ட தூரம் 54.15 கி.மீ. ஆகும்.

இதற்கு வரையறுக்கப்படாத 1 நாள் கட்டணம் 100 ரூபாய். மாத பயண கட்டணம் 2500 ரூபாய். விம்கோ நகர் வரை ரெயில் நீட்டிக்கப்பட்டாலும் கட்டணம் உயர்த்தப்படாமல் பழைய கட்டணமே தொடர்கிறது.

இந்தநிலையில் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம் என்றும் சாதாரண மக்கள்அதில் பயணம் செய்ய முடிய வில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-

புரட்சித்தலைவி அம்மா, சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார். பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் அமைய, அம்மா, தொலைநோக்குப் பார்வையோடு, மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார்.

அம்மாவின் அரசும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன் விளைவாகத்தான், இன்று இத்திட்டத்தின் கட்டம்–1 முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ. நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம்–2–-க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 29.6.2015–ல் இருந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் சேவையை துவக்கியது.

7.25 கோடி பேர் பயணம்

5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6–ம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மெட்ரோ ரெயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணம் கீழ்கண்டவாறு குறைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதன்படி,

20 சதவிகிதம் தள்ளுபடி

க்யூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் -– தற்போதுள்ள கட்டம்–1 – இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.

மாதக்கட்டணம் ரூ.2500

ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் – தற்போதுள்ள கட்டம்-–1 இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 2500 ரூபாய் கட்டணம்தான்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக)

22–ந் தேதி அமுல்

இந்த ஆணை 22–ந் தேதி அன்று முதல்அமலுக்கு வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்தப்படவுள்ள இந்தக் கட்டணக் குறைப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது பயணங்களை குறைந்த செலவில், நிறைவாக மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply