- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகளில் 418 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்

சென்னை, ஏப்.6-
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 418 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பி.சந்திரமோகன் தெரிவித்தார்.
கருத்தரங்கம்
பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் சார்பாகவும்,  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவை  உறுதிபடுத்தும் வகையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும்  பேரணி  வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான  டாக்டர் பி.சந்திரமோகன் கலந்துகொண்டு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு  பேரணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி,சந்திரமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகள்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 418 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை மாநகர காவல் துறை செய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமின்றி, நேர்மையாக வாக்களிக்கலாம். பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்ட ரூ.1.24 கோடி தொகையை உரியவர்களிடம், தகுந்த ஆவணங்கள் பெறப்பட்டு, அந்த தொகையை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலில் அனைவரும் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்யவேண்டும். மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடகங்கள், பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு பாடல்
பேரணி வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் வழியாக  சென்று வடபழனி அம்பிகா வணிக வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக  கருத்தரங்கில் தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடலை  மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான  டாக்டர் பி.சந்தரமோகன் வெளியிட்டார்.

படம் உண்டு… தரணி

Leave a Reply