- சென்னை

சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது., போக்குவரத்து பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

மாதவரம், புழல், செங்குன்றம், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரால் மோட்டார்சைக்கிள்களில் சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜமாலியா பகுதியில் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. சில மணி நேரங்கள் பெய்த மழைக்கே அங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. புரசைவாக்கம் டாணா தெரு, கீழ்ப்பாக்கம், கெல்லிஸ் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் தேங்கியது.

Leave a Reply