- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சென்னை தீவுத்திடலில் 9-ந் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா ேபசுகிறார்

சென்னை தீவுத்திடலில் வருகிற 9–-ந் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–-அமைச்சருமான ஜெயலலிதா பேசுகிறார். இதற்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுக்கூட்டம்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், மொத்தம் உள்ள 234 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே களம் இறங்குகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் கடந்த 4-–ந் தேதி வெளியானது. அன்றே தேர்தல் பிரசார சுற்றுப்பயண அறிக்கையையும் முதல்-–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, சென்னையில் வருகிற 9-–ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முதல்–-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மேலும் பொதுக்கூட்ட மேடையிலேயே சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். மேலும், அதே மேடையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நேரடி ஒளிபரப்பு
சென்னை தீவுத்திடல் பொதுக்கூட்டத்தில் முதல்-–அமைச்சர் ஜெயலலிதா பேசும் நேரடி வீடியோ காட்சிகள், உடனடியாக சென்னையில் உள்ள 21 தொகுதிகளிலும் மக்கள் மத்தியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, செயற்கைகோள் வசதியுடன் டிஜிட்டல் திரை பொருத்தப்பட்ட 75 பிரசார வேன்கள், முதல்–-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசார வேன்கள் 21 தொகுதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு, ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.
பிரத்யேக வாகனம்

மேலும், முதல்–-அமைச்சர் ஜெயலலிதா பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்வதற்கு வசதியாக பிரத்யேக வாகனமும் தயார் செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் வடிவமைக்கப்பட்ட இந்த சொகுசு வேன் முதல்-–அமைச்சர் ஜெயலலிதா பார்வையிடுவதற்காக நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த சொகுசு வேனில் தான் அவர் தமிழகம் முழுவதும் சென்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, அந்த மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றனர்.
வெளியூர் பிரசாரத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-–அமைச்சருமான ஜெயலலிதா விமானத்தில் செல்ல இருக்கிறார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் ஊர்களுக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் முதல்–-அமைச்சர் ஜெயலலிதா செல்ல இருக்கிறார்.

ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு அவர் பிரசார வேனில் பயணிக்கிறார். வழிநெடுக மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தபடி செல்ல இருக்கிறார். முதல்-–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசார பயணத்தை தொடர்ந்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பணிகள் தீவிரம்

பொதுக்கூட்டத்திற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவுத்திடலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் கடும் சோதனை செய்து வருகின்றனர். மேலும் பொதுக்கூடத்திற்கு வருபவர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மைதானத்திற்கு அனுப்பப்படுவார்கள் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply