- சினிமா, செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக போராட்டம் பெண்கள் உள்பட 100 பேர் கைது…

சென்னை, ஏப்.18-
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக போராடிய பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
நட்சத்திர கிரிக்கெட்
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட தங்களது தேவைக்களுக்காக தமிழ் திரைப்பட நடிகர்கள்-நடிகைகள் கிரிக்கெட் போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவர்கள் பல்வேறு மாவட்டங்களின் பெயர்களை கொண்ட பல அணிகளாக பிரிக்கப்பட்டனர். இந்த போட்டிகள் நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்காக ஏராளமான சினிமா நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு முன் திரண்டனர். அக்கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது உள்பட தங்களது தேவைகளுக்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தி மக்களிடம் பணம் வசூல் செய்யக்கூடாது என கோஷங்களை எழுப்பினர். இதுபோன்ற சம்பவம் தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வதற்கு வழி வகுத்துவிடும் என்று கூறி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை தடை செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்கள்.

கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக நின்ற போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply