- செய்திகள்

சென்னையில் தொடங்குகிறது கிரிக்கெட் பாணியில் ‘செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக்’ நடிகர் ஆர்யா தலைமையில் ‘சென்னை ராக்கர்ஸ்’ அணி களம்…

சென்னை,ஆக.19-

கிரிக்கெட் பாணியில் செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் தொடங்க உள்ளது.

சி.பி.எல்.
கிரிக்கெட் மற்றும் சினிமா ஆகிய இரண்டையும் இந்தியர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. அதனால் தான் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். ‘ஹிட்டிக்க’, அதே பாணியில் வந்த சினிமா பிரபலங்களின் செலிபிரட்டி கிரிக்கெட் லீகும் பட்டிதொட்டியெங்கும் ‘ஹிட்டித்தது’. இந்தநிலையில் கிரிக்கெட்டைப் போலவே பேட்மிட்டனிலும் செலிபிரிட்டி லீக் வர இருக்கிறது.

அதன்படி இந்தியாவின் முதல் ‘செலிபிரிட்டி பேட்மிண்ட்டன் லீக்’ (சி.பி.எல்.) வருகின்ற செப்டம்பர் 18-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த செலிபிரிட்டி லீகில் கோலிவுட், மாலிவுட், சாண்டல்வுட் மற்றும் டாலிவுட் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மலேசியாவில் இறுதிப்போட்டி
அப்போது சி.பி.எல். நிறுவனரும், தலைமைச்செயல் அலுவலருமான ஹேமச்சந்திரன் பேசுகையில், இந்த லீக் திட்டத்தை தொடங்கவிருக்கும் எமது எண்ணங்களை நாங்கள் அறிவித்தபோது நான்கு அணி உரிமையாளர்களிடமிருந்து உடனடியாக பிரதிநிதித்துவம் எங்களுக்கு கிடைத்தது. மேலும், நிறுவனம் தொடங்கிய 6 மாதத்திலேயே ஜே.பி.  அகாடமி என்ற நிறுவனத்திடமிருந்து  5 லட்சம் அமெரிக்க டாலர்களை (3.3 கோடி  இந்திய ரூபாய்) பெற்றிருக்கிறது.

இந்த போட்டிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறுகின்றது. குறிப்பாக இதன் இறுதிப்போட்டி மலேசியாவின்  கோலாலம்பூரில் நடக்கிறது. இறுதிப்போட்டியை நடத்துவதற்காக மட்டும் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

‘சென்னை ராக்கர்ஸ்’
கோலிவுட் சார்பில் ‘சென்னை ராக்கர்ஸ்’ அணி களமிறங்குகிறது. பிரான்சைஸ் நிறுவனர் வெங்கடேஷ் தான் இந்த அணியின் உரிமையாளர் ஆவார். சென்னை ராக்கர்ஸ் அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலிவுட் சார்பில் ‘கேரளா ராயல்ஸ்’ அணி களமிறங்குகிறது. இந்த அணிக்கு கேப்டனாக நடிகர் ஜெயராம் செயல்படுவார். சாண்டல் வுட் சார்பில் ‘கர்நாடகா ஆல்ப்ஸ்’ என்ற அணி களமிறங்குகிறது.  நடிகர் திகாந்த் இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டாலிவுட் சார்பில் ‘டாலிவுட் தண்டர்ஸ்’ என்ற அணி களமிறங்குகிறது. இந்த அணிக்கு நடிகர் சுதீர்பாபு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஜே.பி. அகாடெமி நிறுவனத்தின் இயக்குனர் ஜே.பிரவீன், சி.பி.எல். இயக்குனர் ரகுராம் மற்றும் 4 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

—————————
போட்டி பட்டியல் (பாக்ஸ்)

போட்டி           நாள்                               இடம்

லீக்-1              செப்டம்பர் 18                      சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம்

லீக்-2              செப்டம்பர் 24                      கொச்சி பிராந்திய உள் விளையாட்டு அரங்கம்

லீக்-3              அக்டோபர் 8                      பெங்களூரு கர்நாடக பேட்மிட்டன் சங்க அரங்கம்

லீக்-4              அக்டோபர் 22                     ஐதராபாத் கச்சிபவுலி உள்விளயைாட்டு அரங்கம்

இறுதிப்போட்டி     நவம்பர் 11                         கோலாலம்பூர் நெகாரா ஸ்டேடியம்

* செப்டம்பர் 17 சென்னையிலும், நவம்பர் 11 கோலாலம்பூரிலும் தொடக்க விழா நடைபெறும்.

Leave a Reply