- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்: 2 லட்சம் மக்கள் மெரினாவில் குவிந்தனர்

சென்னை, ஜன. 18-

காணும் பொங்கலை முன்னிட்டு 2 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் திரண்டனர். அதே சமயத்தில் கடற்கரை பகுதியில் அத்துமீறிய காதல் ஜோடிகளின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகனங்கள்
தமிழர்களின் திருநாளான தைப்பொங்கலின் இறுதி விழாவான காணும்பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரையில் வழக்கம்போல இந்த ஆண்டும், காணும் பொங்கலை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் குவியத்தொடங்கினர். காலை 10 மணி முதல் சைக்கிள், மாட்டு வண்டிகள், இரண்டு சக்கர வாகனங்கள், வேன்கள், மாநகர பஸ்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் மூலம் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உறவினர்களுடன் மாட்டு வண்டியில் கட்டு சோறு, கரும்புடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர். மெரினா கடற்கரை முன்பு உள்ள பூங்காவில் போர்வையை விரித்து, மதிய உணவை உறவினர்களுடன் சாப்பிட்டு முடித்த பிறகு அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்றுவிட்டு, கடற்கரைக்குள் இறங்கினர். பொதுமக்கள் கூட்டம் குவிய தொடங்கியதால், மாலை வேளை தொடங்கிய சமயத்தில், மெரினா கடற்கரை முழுவதுமே மணல் பரப்பே தெரியாத அளவுக்கு மனித ‘தலை’களாகவே காட்சி அளித்தது.
கண்காணிப்பு
மெரினாவில் குழந்தைகள், இளைஞர்கள், இளம் பெண்கள், முதியவர்கள் என அனைவருமே ஒன்று சேர்ந்து தங்களது பிடித்தமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.  மெரினாவில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பஜ்ஜி, சுண்டல், வறுத்த மீன் விற்பனையும் சூடுபிடித்தது. குறிப்பாக பஜ்ஜி, மீன் வறுவல் கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடியது.

அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை 5 இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரங் களில் இருந்தபடியே போலீசார் ‘பைனாகுலர்’ மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினாவில்
கடலில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி, சிலர் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை எச்சரித்த போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர்.
எச்சரிக்கை

இதேபோல் அத்துமீறி செயல்பட்ட காதலர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஒரு சில காதலர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்ட போலீசார், ‘பெற்றோருடன் வந்து செல்போனை பெற்றுக் கொள் ளுங்கள்’ என கூறி அனுப்பி வைத்தனர்.

மெரினாவைப்போல பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிலும் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.  அதேபோல், கிண்டி சிறுவர் பூங்காவிலும் சிறுவர்– சிறுமிகள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் உயர்ரக பாம்பு வகைகளை கண்டு அவர்கள் பரவசம் அடைந்தனர்.
வண்டலூர் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவிலும்  காணும் பொங்கல் கொண்டாட்டம் நேற்று களை கட்டியது. பஸ், கார்களில் ஏராளமான பொதுமக்கள் பூங்காவுக்கு காலையிலேயே வந்திருந்தனர். பூங்காவில் இருந்த விலங்குகளை பார்வையிட்ட அவர்கள், மாலை வரை அங்கேயே பொழுதை கழித்தனர். பார்வையாளர்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உள்ளே எடுத்து செல்ல பூங்கா நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
அதே சமயத்தில் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள கேண்டீன்களில் சிறிது நேரத்தில் உணவுப்பொருட்கள் விற்று தீர்ந்ததால், பலர் சிற்றுண்டி கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
போலீஸ் விசாரணை
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந் தனர். மேலும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படையினர் பெண்களிடம் வம்பில் ஈடுபட்டவர்கள், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள், இசைக்கருவிகள் மூலம் அதிக ஒலி எழுப்பி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியவர்கள், கடற்கரை பகுதியில் பைக் ரேஸ் சென்றவர்கள், பிக்பாக்கெட் அடித்தவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரைக்கு இரவு 7 மணி நிலவரப்படி 2 லட்சம் மக்கள் திரண்டு வந்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாக்ஸ்
குழந்தைகளை கண்டுபிடிக்க…

மெரினாவில் கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க, குழந்தைகளின் கைகளில் போன் நம்பர்கள் அடங்கிய, சிறிய வளையத்தை போலீசார் அணிவித்தனர்.

Leave a Reply