- செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மசாலா தோசைக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு ரெயில்வேயின் நேரடி விற்பனை…

சென்னை, ஆக.25-
ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி.
ரெயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் பணியை ரெயில்வேயின் மற்றொரு நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. கேட்டரிங் பிரிவு கவனித்து வருகிறது. ரெயில்கள் மற்றும் நிலையங்களில் விற்கப்படும் உணவு பொருட்கள், குடிநீர் போன்றவற்றை கண்காணித்து வருகிறது. தரம், அளவு, விலை ஆகியவற்றை ஐ.ஆர்.சி.டி.சி. ஆய்வு செய்து நிர்வகித்து வருகிறது.
ஜன்ஆகர்
தற்போது தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு நேரடியாக உணவு பண்டங்கள் விற்பனை சேவையை தொடங்கியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதன் முதலாக ‘ஜன்ஆகர்’ என்ற பெயரில் உணவு விற்பனை மையத்தை திறந்துள்ளது. அங்கு காலை, மதியம், மாலை உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. தெற்கு ரெயில்வேயின் வணிக துறை இதனை நிர்வகித்து வருகிறது.
மசாலா தோசை
பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, பூரி, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.  இங்கு மசாலா தோசை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மசாலா தோசை கிடைக்கும்.
500 தோசை
ஆனால் இந்த கடை திறந்த ஒரு மணி நேரத்தில் மசாலா தோசை விற்று தீர்ந்து விடுகிறது. 8.30 மணிக்கே தோசை கிடைப்பது இல்லை. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று மசாலா தோசையை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். தினமும் 500 தோசை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதிக வரவேற்பு
இதுபோல மாலையில் 4 மணிக்கு மசாலா தோசை விற்பனை தொடங்குகிறது. 5.30 மணிக்குள் மசாலா தோசைக்கான மாவு தீர்ந்து விடுகிறது. மசாலா தோசைக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதே அளவிலான தோசை மற்ற ஓட்டல்களில் ரூ.43-க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நிறை-குறை
இந்த சேவைக்கு பொது மக்களிடம் எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பதை அறிய தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதற்காக ஒரு மையமும் தொடங்கப்பட்டுள்ளது. 044-25354405 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நிறை-குறைகளை தெரிவிக்கலாம்.

Leave a Reply