- செய்திகள், வணிகம்

சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி

புதுடெல்லி, பிப்.9:-
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று பங்கு வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 102 புள்ளிகள் குறைந்தது.
ஐரோப்பிய சந்தைகள்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தொடர் கவலைகளால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கின. அதன் தாக்கம் நம் நாட்டு பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு பங்கு வர்த்தகம் நிறைவடைந்த பிறகு வெளியிட்டது. ஆனால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் பங்குச் சந்தையை ஆட்டம் காண வைத்தன.
மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவையும் பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தின.
ரியல் எஸ்டேட்
மும்பை பங்குச் சந்தையில் தொலைத்தொடர்பு, நுகர்வோர் சாதனம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளின் குறியீட்டு எண்கள் ஏற்றம் கண்டன. அதே வேளையில், மின்சாரம், எரிசக்தி உள்பட பல துறைகளின் குறியீட்டு எண்கள் இறங்கின.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், லுப்பின், கெயில், மாருதி, அதானி போர்ட்ஸ், டாட்டா ஸ்டீல் ஆகிய 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டாட்டா மோட்டார்ஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 22  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
நிப்டி
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 329.55 புள்ளிகள் சரிந்து 24,287.42 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் நிறைவில் நிப்டி 101.85 புள்ளிகள் குறைந்து 7,387.25 புள்ளிகளில் நிலை கொண்டது.

Leave a Reply