- மாநிலச்செய்திகள்

செங்கோட்டையில் வன்முறை; நடிகர் தீப் சித்து கைதானார்

குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நடிகர் தீப் சித்துவை போலீசார் கைது செய்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதற்கு, நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். நிபந்தனைகள் மீறப்பட்டதால் வன்முறை வெடித்தது. போலீசார் மற்றும் பொதுச்சொத்துகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 400 போலீசார் காயமடைந்தனர். போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் செங்கோட்டைக்குள் நுழைந்து சீக்கிய மதக்கொடியையும் ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக டெல்லி போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில், பஞ்சாப் நடிகர் தீப் சித்து, சமூக ஆர்வலர் லகா சிதானா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தேடி வந்தனர். ஆனால், தீப் சித்து தலைமறைவானார். இதனையடுத்து தீப் சிங் உள்ளிட்ட 4 பேர் குறித்து துப்பு கொடுத்தால் தலா ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தீப் சித்துவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் பெண் நண்பர் ஒருவருவடன் தீப் சித்து தொடர்பில் இருந்துள்ளார். இங்கு வீடியோ எடுத்து அதனை அவருக்கு தீப் சித்து அனுப்பியுள்ளார். அதனை, அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதன் மூலம் துப்பு துலக்கி அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply