- செய்திகள்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு மேலும் ஒருநாள் அனுமதி…

சென்னை, ஜூலை 29-

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரிடம் மேலும் ஒருநாள் விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராம்குமார் கைது

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த ஜூன் 24-ம் தேதி காலை  கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர்  அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் ஒருநாள் காவல்

போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ராம்குமாரை மீண்டும் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டனர். இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
காவல்துறையினர் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாருக்கு எதிராக தடயங்களை உருவாக்கவும், ஆதரவாக உள்ள சாட்சிகளை அழிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வாதிட்டார்.
ராம்குமாரை சி.சி.டி.வி. காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும், கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவுமே இந்த காவல் கேட்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை வரும் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

போலீசாருக்கு அனுமதி
ராம்குமாரை போலீஸ் காவல் விசாரணைக்கு அனுப்பும் மனு மீதான விசாரணை ேநற்று நடைபெற்றது. ராம்குமார் தொடர்புடைய சி.சி.டி.வி காட்சிகளை ஒப்பிட்டு பார்க்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 8-ந்தேதி ராம்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply