- செய்திகள்

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது மாமல்லபுரத்தில் வெயிலுக்கு ஒருவர் பலி…

மாமல்லபுரம், ஆக. 17- மாமல்லபுரத்தில் கடும் வெயிலுக்கு ஒருவர் பலியானார். இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

கடும் வெயில்
மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி 3 நாள் தொடர் விடுமுறை என்பதால் பொழுது போக்குக்காக மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வந்து இருந்தனர். அவர்கள் நடந்து சென்று பாரம்பரிய சின்னங்கள், குடவரை கோவில்கள் என புராதன சின்னங்களை மலை குன்றுகளுக்கு சென்று பார்க்க முடியாமல் திரும்பினர். குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டனர்.

ஒருவர் சாவு
கோவளம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). நேற்று முன்தினம்மதியம் திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை அருகே கடை வீதிக்கு வந்த போது வெயில் தாங்க முடியாமல் சுருண்டு மயங்கி விழுந்தார்.
அவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply