- செய்திகள், விளையாட்டு

சுயசரிதை எழுதுகிறார் சானியா ஜூலையில் வெளிவருகிறது

புதுடெல்லி, மே 5:-

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கை பயணம் குறித்து சுயசரிதை எழுதிவருகிறார். இந்த சுயசரிதை வரும் ஜூலை மாதம் வெளிவருகிறது.

‘ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்’(Ace Aganist Odds) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை சானியா, அவரின் தந்தை இம்ரான் மிர்சாவுடன் இணைந்து எழுதிவருகிறார்.

29-வயதாகும் சானியா மிர்சா ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சானியா மிர்சா, 16-வயதிலேயே சர்வதேச டென்னிஸில் தடம் பதித்து, விம்பிள்டனில் இரட்டையர் சிறுமியர்பிரிவில் பட்டம் வென்றார். சர்வதேச அளவில் ஒற்றையர் பிரிவில் சோபிக்க தவறிய சானியா, இரட்டையர் பிரிவில் ஜொலித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச டென்னிஸில் ஒற்றையர்பிரிவில் இருந்து சானியா ஓய்வுபெற்றதாக அறிவித்து, தனது கவனத்தை இரட்டையர் பிரிவில் செலுத்தினார். 2015 ஆகஸ்ட் முதல் 2016 மார்ச் வரை தொடர்ந்து 45 போட்டிகளில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஹிங்கிசுடன் இணைந்து, சானியா வெற்றிகளைக் குவித்து முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்த சுயசரிதை குறித்து சானியா கூறுகையில், “ இந்தியாவில் உருவம் அடுத்த தலைமுறை டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக அமையும். என் கதை இளைய தலைமுறையை ஈர்த்தால், எதிர்காலத்தில் அவர்கள் கிராண்ட்ஸ்லாம் போட்டியை வெல்லலாம்.'' என்று தெரிவித்தார்.

மேலும், இந்த புத்தகத்தில் டென்னிஸ் போட்டியைக் கடந்து, களத்துக்கு வெளியே சந்தித்த நபர்கள், ருசிகர சம்பவங்கள், நட்புகள், தனது வளர்ச்சி, தடைகள், சர்ச்சைகள் ஆகியவை குறித்தும் சானியா விவரிக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் உடன் நடந்த திருமணம், அதுகுறித்த சுவாரஸ்யங்கள் குறித்தும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply