- செய்திகள், மாநிலச்செய்திகள்

சிறந்த அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்தவர் அம்பேத்கர்

புது டெல்லி, ஜன. 29:-

தேன் போன்ற இனிய, நல்ல அம்சங்களைக் கொண்ட சிறந்த அரசியல் சாசனத்தை அம்பேத்கர் வகுத்துக் கொடுத்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
என்.சி.சி. பேரணி

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்கள் டெல்லி சென்று இருந்தனர்.
அவர்கள் பங்கேற்ற பேரணி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடந்த ஒரு மாதகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் டெல்லியில் தங்கி இருந்தீர்கள்.
தேசபக்தியை வளர்க்கிறது

டெல்லியில் இருந்தபோது பார்த்த மற்றும் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

என்.சி.சி. அமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, தேச பக்தியை வளர்க்க உதவுகிறது. மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற பின்னர் தூய்மை மற்றும் தேசபக்தி குறித்து தங்கள் பகுதி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும்.
சிறந்த அரசியல் சாசனம்

இந்த குடியரசு தினம் அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டை கொண்டாடும் வேளையில் வந்துள்ளது. நல்ல அம்சங்களை மட்டுமே வடிகட்டி எடுத்து அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இதற்காக அவர் கடும் உழைப்பை கொடுத்துள்ளார்.
மலரில் இருந்து வண்டு தேனை உறிஞ்சி எடுப்பதைப் போல நல்ல விஷயங்களை தேர்ந்தெடுத்து அரசியல் சாசனத்தை அம்பேத்கர் வகுத்துள்ளார். அவர் வகுத்துக் கொடுத்த அரசியல் சாசனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நமக்கு தோள் கொடுக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply