- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சியாச்சின் பனிச்சரிவில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் சென்னை வந்தது அமைச்சர்கள்-அதிகாரிகள் இறுதி அஞ்சலி

தியாகராயநகா; பிப். 16-
டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ராணுவவீரரின்  உடலுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் ராணுவ  அதிகாரிகள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழக வீரர் பலி

இந்திய எல்லை பகுதியான சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் கடந்த 3-ம்தேதி பனிச்சரிவில் சிக்கினர். இதில் கர்நாடகாவை சேர்ந்த அனுமந்தராவ் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த விபத்தில் மேலும் பல ராணுவ வீரர்கள் உயிர் இழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து  மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது 10 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் தமிழகத்தை சேர்ந்த வேலூர் அடுக்கம்பாறை ராணுவ வீரர் ஏழுமலை (வயது 38) என்பவரும் பலியாகி இருப்பது தெரியவந்தது.

அஞ்சலி

இதைதொடர்ந்து பலியான ராணுவவீரரின் உடலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 9.15 மணிக்கு சென்னைக்கு கொண்டு  வந்தனர். அங்கு ராணுவ மரியாதையுடன்  அவரது உடலை பெற்றுக்கொண்டனர்.
தென்பிராந்திய ராணுவ  அதிகாரி (பொறுப்பு) லெப்டினெண்ட் ஜெனரல் ஜக்பீர்சிங், நேவல் பிளாக் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தாம்பரம் ஏர்கமாண்டர் ரிப்பன் குப்தா ஆகியோர் பலியான ராணுவவீரருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்பின் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.கே.எம்.சின்னையன், வளர்மதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, தமிழக பா.ஜ.க.  தலைவர் தமிழிசை சவுந்திராராஜன்  ஆகியோரும் ஏழுமலையின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு முழு ராணுவ மரியாதையுடன்  ஆம்புலன்சில் ஏழுமலையின் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

Leave a Reply