- அரசியல் செய்திகள், சினிமா, செய்திகள்

சிம்பு ஆபாசப் பாடல் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் திடீர் ஆதரவு…

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில், நடிகர் சிம்பு பாடியதாகக் கூறப்படும் ‘பீப்’ பாடல், இணையத்தில் வெளியாகி அண்மையில் பரபரப்பானது. அந்தப் பாடலில், பெண்களின் உடலுறுப்புகளைக் குறிப்பிடும் வார்த்தைகளை இடம்பெறச் செய்து, ஆபாசமான பாடலை வெளியிட்டதற்காக, இருவரையும் கைது செய்ய வேண்டும் என  பல தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் இருவரின் உருவப்  படங்களும் எரிக்கப்பட்டன.

கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா என்பவர் இருவர் மீதும் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில்,  3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் சம்மன்  அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், முன்  ஜாமீன் கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் சிம்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5-ம் தேதி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக சிம்புவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.  இருப்பினும் சிம்புவையும், அனிருத்தையும் கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சிம்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது  நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி  என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதேபோல், 23-வது கோர்ட்டில் பா.ம.க.,மாவட்ட செயலாளர் வெங்கடேசனும், விருகம்பாக்கம்  பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த லட்சுமணன் என்ற புதியவன்,  சினிமா பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி ஆகியோரும் வழக்குகள் தொடர்ந்தனர்.

கடந்த 28-ந் தேதி, 23-வது நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்குகள் விசாரணைக்கு  வந்த போது, பா.ம.க.,சார்பில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் மாவட்ட செயலாளர்  வெங்கடேசன் திடீரென்று வாபஸ் பெற்றார். மற்ற 2 வழக்குகள் மீதான விசாரணையை வரும் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு  உத்தரவிட்டார்.

இந்த நிலையில் 9-வது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி  தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதேபோல் 23-வது நீதிமன்றத்தில் விடுதலை  சிறுத்தைகள் கட்சி நிர்வாகி புதியவன் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ்  பெற்றார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளில் 3  வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், சினிமா பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி தொடுத்த வழக்கு மட்டும்  நிலுவையில் உள்ளது.

திரையுலகத்தினர் கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக, பா.ம.க.,வினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் வந்தால், அதை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பது இக் கட்சிகளின் வழக்கம். அந்த அடிப்படையில், சிம்புவின் ஆபாசபாடலுக்கு  வெறும் எதிர்ப்பு என்று தெரிவிக்காமல், இரு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வழக்குகள் பதிவு செய்தனர்.

ஆனால், திடீரென்று, இரண்டு கட்சிகளின் பிரமுகர்களும், சிம்புவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆபாசப் பாடல் விவகாரத்தில், வழக்குகளை வாபஸ் பெற்றதன் மூலம்,  சிம்புவின் ஆபாசப் பாடலுக்கு, பா.ம.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் ஆதரவு கொடுக்கிறார்களா என்று, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply