- செய்திகள், மாநிலச்செய்திகள், விளையாட்டு

சிட்னியில் இன்று 3-வது டி20 போட்டி ‘ வொயிட் வாஷ் ’ – முனைப்பில் இந்தியா– தப்பிக்குமா ஆஸி.

சிட்னி, ஜன. 31:-

சிட்னியில் இன்று நடக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர்கள் போட்டியிலும் வென்று அந்த அணியை ‘ வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் களம் இறங்குகிறது தோனி தலைமையிலான இளம் இந்திய அணி.

ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலிய -இந்திய தொடரின் இறுதியில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியை ‘ க்ளீன் ஸ்வீப் ’ செய்ய ஆஸ்திரேலிய அணி முயன்றது. இப்போது 20 போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியை ‘ வொயிட்வாஷ் ’ செய்ய இந்தியா முயற்சிக்கிறது.

ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்திருந்த  போதிலும், பீனிஸ் பறவை போன்று தோல்வியில் இருந்து பாடம் கற்று டி20 தொடரை  இந்திய அணி  கைப்பற்றி இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அடிலெய்ட், மெல்போர்ன் நகரில் நடந்த  முதலிரு போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. ஆதலால், இந்திய அணியைப் பொருத்தவரை இந்த போட்டி ஒருமுறைக்காகவே அமைந்துள்ளது.

சூப்பர் பார்ம்…

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடுக்கும் வகையிலையே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மா, கோலி ,தவான் ஆகியோர் போட்டி போட்டி தங்கள் பேட்டை சுழற்றி வருகின்றனர். யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் இன்னும் முழுமையாக தங்கள் பேட்டிங்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும் இன்றைய போட்டியில் யுவராஜ் சிங் அல்லது பாண்டயா ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசுகின்றனர். நெஹ்ரா, யாதவ் எதிர்பார்க்கும் வகையில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தவில்லை. ஆனால், பும்ரா, பாண்டயா இருவரு பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆதலால், இப்போட்டியில் ஆஸ்திரேலி அணிக்கு இந்திய அணி கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்சன் கேப்டன்..

ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன்பிஞ்ச் தொடைதசைப் பிடிப்பு காரணமாக இன்றைய போட்டியில் களம் இறங்கமாட்டார் என்று அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று நடக்கும் கடைசி டி20 போட்டிக்கு அனுபவ வீரர் ஷேன் வாட்சன் கேப்டனாக செயல்படுகிறார். ஆரோன் பிஞ்ச்சுக்கு பதிலாக உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித் இல்லாத அனுபவமற்ற அணி களத்தில் இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாக்னர், ஹேஸ்டிங்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மாத்யு வேட் ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். இந்த தொடரில் கவாஜா சேர்க்கப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்திய அணியின் சவால்கள் மீறி ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெறுவது சற்று கடினமாக ஒன்றாகவே மாறி இருக்கிறது.

அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி: எம்.எஸ்.தோனி(கேப்டன்), சிகர்தவான், ரோகித்சர்மா, விராத் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டயா, குர்கீரத் மான், ரிஷி தவான், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன்சிங், ஜஸ்பரித் பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, உமேஷ் யாதவ், அஜின்கயா ரஹானே.

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஷேன்வாட்சன்(கேப்டன்), கேமரூன் பேன்கிராப்ட், ஸ்காட் போலந்து, கேமரூன் பாய்ஸ், ஜேம்ஸ் பாக்னர், டிராவிஸ் ஹெட், உஸ்மான்கவாஜா, நாதன் லியான், கிறிஸ் லியான், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஷான் டெய்ட், ஆன்ட்ரூ டை.

Leave a Reply