- செய்திகள், விளையாட்டு

‘சிங்கத்தை’ சாய்க்குமா ‘டேர் டெவில்ஸ்’ ? டெல்லியில் இன்று நடக்கிறது

புதுடெல்லி, ஏப். 27:-

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த ரெய்னா தலைமையிலான ‘குஜராத் லயன்ஸ்’ அணியை எதிர்கொள்கிறது ஜாகீர்கான் தலைமையிலான ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ அணி.

குஜராத் லயன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் குஜராத் அணி உள்ளது. மாறாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றாலும், அடுத்தடுத்து 3 வெற்றிகளைப் பெற்று அனைத்து அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்து வருகிறது. டெல்லி அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

டெல்லிஅணியில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மன் குயின்டன் டீ காக்கின் அதிரடி சதம்,  சஞ்சு சாம்சன், டுமினி, கருன்நாயர் ஆகியோரின் பொறுப்பான ேபட்டிங் அந்த அணிக்கு பெரியபலமாக கடந்த சில போட்டிகளாக அமைந்திருக்கிறது. இவர்களின் பேட்டிங் இன்றும் ஜொலித்தால் வெற்றி கிட்டும்.  குறிப்பாக ராகுல் டிராவிட்டின் பயிற்சி அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

பந்துவீச்சில், ஜாகீர்கான், கிறிஸ் மோரிஸ் மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும் மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள், சுழற்பந்துவீச்சில் அமித்மிஸ்ரா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் செயல்பாடு திருப்தி அளித்தாலும் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வருத்தமே. கடந்த 3 போட்டிகளில் வெற்றியை மட்டும் ருசித்து நம்பிக்கையுடன் போட்டியை டெல்லி அணி எதிர்கொள்கிறது.

ஹாட்ரிக் வெற்றி பெற்று வீர நடைபோட்ட குஜராத் லயன்ஸ் அணிக்கு  சன்ரைசர்ஸ் அணியின் வார்னர் தடைபோட்டார். இருந்தபோதிலும், அடுத்தபோட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி தங்களை சார்ஜ் செய்து கொண்டது குஜராத் அணி.  புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் குஜராத் அணி இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேறும்.

டுவைன் ஸ்மித், ஆரோன்பிஞ்ச், ரெய்னா, மெக்கலம், தினேஸ் கார்த்திக், டுவைன் பிராவோ என வலிமையான பேட்டிங் பட்டாளம் நிலைத்தால் வெற்றி எளிதாகும். பந்துவீச்சிலும் பிரவீண்குமார், ஜேம்ஸ்பாக்னர் மட்டுமே இன்னும் சிறப்பாகச் செயல்படாதது கவலையளிக்கிறது. மற்றவகையில் அனைத்து வகையிலும் பலம்பொருந்திய அணியாக குஜராத் லயன்ஸ் அணிக்கு வெற்றி எளிதாகும்.

Leave a Reply