- செய்திகள், விளையாட்டு

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ

 

பிஜ்பேரா (காஷ்மீர்) மார்ச் 6:-

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்று பாகப்பிரிவினையில் வரும் மருதகாசியின் பாடலை பி. சுசீலாவின் இன்னிசைக் குரலில் கேட்கும் போதெல்லாம் இன்றைக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மருதகாசியின் வரிகள் உண்மைதான் என்று நிரூபித்துள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ஹுசைன் லோன் என்பவர். ஆம். 26 வயது நிரம்பிய,  இரண்டு கைகளையும் இழந்த இந்த இளைஞர் ஜம்மு-காஷ்மீர் மாநில மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்கிறார். தனது இடது தோல்பட்டைக்கும் தலைக்கும் இடையே மட்டையைப் பிடித்துக் கொண்டு பேட்டிங் செய்யும் இவர் காலால் பந்து வீசுகிறார். ஆக பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அசத்தும் இவர் இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் பரம ரசிகர் ஆவார்.

அமீருக்கு 7 வயது நிரம்பிய நிலையில் அவர்களுக்கு சொந்தமான  மரம் அறுக்கும் தொழிற் கூடத்துக்கு சகோதரருக்கு மதிய உணவு கொண்டு சென்றுள்ளார். சகோதரர் உணவு அருந்தும் நேரத்தில் தவறுதலாக மரம் அறுக்கும் இயந்திரத்துக்கான ஸ்விட்சை போட்டுவிட எதிர்பாராதவிதமாக கன்வேயர் பெல்டில் சிக்கி அமீரின் 2 கைகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதில் வேதனையான விஷயம் என்ன என்றால் தந்தை நடத்தியதோ கிரிக்கெட் மட்டைகளை தயாரிக்கும் தொழிற்சாலை என்பதுதான்.
2-ம் வகுப்பு படிக்கும் நிலையில் கைகளை இழந்த அமீர் எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையே படிப்பையும் விட்டுக் கொடுக்காமால் கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் துறக்காமல் வளர்ந்துவந்தார்.
7-ம் வகுப்பு படிக்கும் சமயம் பக்கத்து வீட்டில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்ற போது அவர்கள் தொலைகாட்சியை நிறுத்திவிட்டு தன்னையும் வெளியே துரத்திவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார் அமீர். ஆனால் இந்த சம்பவம்தான் அவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் நாட்டம் செலுத்தி ஆர்வமுடன் விளையாடி வந்த அவரை கல்லூரியில் படிக்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கான அணியில் சேர்ந்து விளையாடும்படி பேராசிரியர் ஒருவர் ஊக்கமக்களித்தார். பின்னர் என்ன குருவின் போதனையை ஏற்று மாற்றுத் திறனாளிகளுக்கான அணியில் சேர்ந்து இன்று அந்த மாநில அணியின் தலைமைப் பொறுப்புக்குச் சென்றுவிட்டார்.
ஆக, மேலே சொன்ன பாடலின் மற்றும் ஒரு வரிக்கு சான்றாக விளங்குகிறார் அமீர். ஆம் சிந்தையும் செயலும் ஒன்றுபட்டலே மாற்றம் காண்பதுண்டோ?.

Leave a Reply