- செய்திகள், விளையாட்டு

சிங்கத்தின் ஆட்டம் தொடருமா?

 

புனே, ஏப்.28:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

இந்தப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள அந்த மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு நடக்கிறது. 9-வது ஐபிஎல் போட்டியில் இரு அணிகளும் புது வடிவத்தில் முதல் முறையாக களம் இறங்கியுள்ளன. இதில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் தோல்வியைக் கண்டு புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் மட்டும் தோல்வி கண்டுள்ளது. அதே சமயம் புனே அணியும் 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி கண்டுள்ளது. அந்த அணி வென்ற அணியில் ஹைதராபாத் அணியும் அடங்கும். முன்னதாக துவக்க ஆட்டத்தில் மும்பை அணியையும் வென்றுள்ளது.

குஜராத் அணியைப் பொருத்த வரை ஆரோன் பின்ஞ், பிரென்டன் மெக்குல்லம், அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் திறமையான ஆட்டம் அந்த அணிக்கு பலத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

பின்ஞ் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டாலும் அவருக்குப் பதிலாக களம் இறங்கும் டி ஸ்மித் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன் தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சாளர்களைப் பொருத்தவரை வேகப் பந்து வீச்சாளர்களான பிராவோ, குல்கர்னி இருவரும் நன்றாகவே பந்து வீசுகின்றனர். இவர்கள் முறையே இதுவரை 7, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதே போல் சுழல் பந்து வீச்சாளர்களான பிரவீண் தாம்பே, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 5, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

புனே அணியைப் பொருத்தவரை துவக்க ஆட்டக்காரர்களான ரஹானே, டுபிளசிஸ் இருவரும் நன்றாகவே ஆடி வருகின்றனர். ரஹானே இதுவரை 223 ரன்களை எடுத்துள்ளார். டுபிளசிஸ் 206 ரன்களை எடுத்துள்ளார். அதே சமயம் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஸ்டீவன் ஸ்மித் இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தைக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் அஸ்வின், பெரேரா இருவரும் முறையே 7, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அசோக் திண்டாவின் பந்து வீச்சும் அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply