- செய்திகள், மாநிலச்செய்திகள்

சாலை விபத்து சர்ச்சையில் சிக்கிய ஸ்மிருதி இரானி

புதுடெல்லி, மார்ச் 8-

சாலை விபத்தில் காயம் அடைந்த டாக்டரை காப்பாற்ற முன்வரவில்லை என்று, அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது, டாக்டரின் மகள் குற்றம் சாட்டி இருக்கிறார்.

உயிர் தப்பினார்

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த சனிக்கிழமை இரவில் டெல்லி அருகே நடந்த சாலை விபத்தில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

அமைச்சரின் பாதுகாப்பு அணிவரிசையில் வந்த ஒரு கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷ் நாகர் என்ற டாக்டர் பலியானார்.

டாக்டரின் மகள் பேட்டி

அருவடைய மகள் சந்தாலி மற்றும் அவருடைய உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த பங்கஜ் என்ற குழந்தையும் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

விபத்தில் பலியான டாக்டரின் மகள் சந்தாலி நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தங்கள் மீது மோதியது அமைச்சர் இரானியின் கார் என்று கூறினார்.

உதவ மறுத்த அமைச்சர்

சந்தாலி மேலும் கூறுகையில், ‘‘எங்கள் மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த வாகனம் மோதியது. அது அமைச்சர் இரானியின் கார். எங்களுக்கு உதவி செய்யும்படி, அமைச்சரிடம் கேட்டேன்.

ஆனால், விபத்து நடந்தபோதும், அதன் பின்னரும் எங்களுக்கு உதவி செய்ய அமைச்சர் மறுத்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் எங்களுக்கு உதவி செய்து இருக்கலாம். அப்படி அவர் உதவி செய்திருந்தால் எனது தந்தையின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

மனித நேயம்

சந்தாலியின் சகோதரர் அபிஷேக் கூறியதாவது-

‘‘விபத்தில் சிக்கி எனது தந்தை கீழே விழுந்து கிடந்தபோது இரு குழந்தைகளும் உதவி கோரி இருக்கிறார்கள்.

‘‘காரில் வந்த அமைச்சர் மற்றும் குழுவினர் காரை விட்டு இறங்கி வெளியே வந்து பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு உதவி செய்யாமல் மீண்டும் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டதாக’’ காயம் அடைந்த எனது சகோதரி என்னிடம் தெரிவித்தார்.

மனித நேய அடிப்படையில் அமைச்சர் இரானி உதவி செய்து எனது தந்தையைக் காப்பாற்றி இருக்கலாம்’’.

இவ்வாறு அபிஷேக் கூறினார்.

போலீசில் புகார்

இதற்கிடையில், இந்த விபத்து குறித்து அபிஷேக் ஆக்ரா போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், அமைச்சரின் வாகன அணிவகுப்பு வரிசையில் வந்த கார்தான் மோட்டார் சைக்கிளில் மோதியதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களை பொருட்படுத்தாமல் அமைச்சர் இரானி அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், பின்னர் போலீசார்தான் காயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்ததாகவும், புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமைச்சர் மறுப்பு

இந்த குற்றச்சாட்டை அமைச்சர் இரானியின் அலுவலகம் நேற்று மறுத்து இருக்கிறது.

இதையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சரின் வாகன அணிவகுப்பில் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லை என்றும், விபத்து நடந்ததும் மதுரா சீனியர் போலீஸ் சூப்பிரண்டை அமைச்சர் அழைத்து உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து காயம் அடைந்தவர்களை மருத்துவ மனையில் சேர்க்கும்படி உத்தரவிட்டதாகவும், கூறப்பட்டு உள்ளது.

———-

Leave a Reply