- உலகச்செய்திகள்

சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று அதிகாலை அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியும் ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதில் சவுதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் ஏமனின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஆசிர் மாகாணத்திலுள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று அதிகாலை அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். அதேசமயம் இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது போன்ற ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply