- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை மீட்க வேண்டும்

சென்னை, ஏப். 4-
‘‘சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரையும் மீட்டு தாய்நாட்டுக்கு கொண்டுவர பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என வாசன் கூறி உள்ளார்.

ஒப்பந்த அடிப்படை
இதுதொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி வேலை செய்து வருகின்றனர். ஆனால் கடந்த பல மாதங்களாக தமிழக மீனவர்களுக்கான சம்பளத்தை அந்த தனியார் நிறுவனம் கொடுக்கவில்லை. மேலும் கடந்த 2 மாத காலமாக அவர்களை மீன்பிடிக்கவும் அனுமதிக்கவில்லை.

இதனால் தமிழக மீனவர்களிடம் பணவசதி இன்றி அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சவுதி அரேபிய நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, அந்த நாட்டு தனியார் நிறுவனம் தமிழக மீனவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக கொடுக்க வலியுறுத்த வேண்டும்.
அழுத்தம்
மேலும் அங்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மீனவர்களையும் தாய் நாட்டுக்கு மீட்டு கொண்டுவர வேண்டிய முயற்சிகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அந்த நாட்டு   மன்னருடன் நேரடியாகப் பேசி தமிழக மீனவர்கள் 63 பேரையும் தாய் நாட்டிற்கு  மீட்டுக் கொண்டுவர அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறி உள்ளார்.

Leave a Reply