- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

சவுதி அரேபியாவில் சித்ரவதை செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி…

மதுரை, ஏப்.1- சவுதி அரேபியாவில் சித்ரவதை செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீசு அனுப்பியுள்ளது.
மீனவர்கள்
ராமநாதபுரம், கன்னியாகுமரி, மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 62 மீனவர்கள் சவுதி அரேபியாவில் தவித்து வருகின்றனர். பாஸ்போர்ட்டுகளும் பறிக்கப்பட்டு அவர்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளின்றி துயரத்தில் தவிக்கும் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சித்ரவதை
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரரின் மாமா சேதுராஜா (வயது 43) கடந்த ஆறு வருடங்களாக சவுதியில் யூசூப் கலீல் என்பவரிடம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடன் மேலும் 61 தமிழக மீனவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை உணவு மற்றும் குடிநீர் வசதி இல்லாத இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர். இதனைத்தொடர்ந்து மீனவர்களை மீட்கக்கோரி தூதரக அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
நோட்டீஸ்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Leave a Reply