- செய்திகள், விளையாட்டு

“ சவால்களை எதிர்கொள்ள தயார் ’ ‘தல’ தோனி நம்பிக்கை

கொல்கத்தா, மார்ச் 9:-

சொந்த நாட்டில் டி20 உலகக்கோப்பை நடக்கிறது என்பதற்காக எதையும் சாதகமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். எந்த சவாலையும் எதிர்கொள்ள அணி தயாராக இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் மகிந்திரசிங் தோனி தெரிவித்தார்.

டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி புரட்டி எடுத்தது, இலங்கைக்கு எதிரான டி20 கோப்பையை வென்றது, ஆசியக்கோப்பை வெற்றி என கடந்த ஒரு மாதத்துக்குள் 3 கோப்பைகளை வென்று, தோனி தலைமையிலான இளம் படை உற்சாகத்தில் இருக்கின்றனர்.

வரும் 15ந்தேதி டி20 உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் பிரதானச்சுற்று தொடங்க உள்ள நிலையில், அது குறித்து கேப்டன் தோனி கொல்கத்தாவில் ஊடகங்களுக்கு  நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணி 6-வது கியர் வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. எந்தவிதமான போட்டிக்கும் தகுதிப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக உருவேற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆதலால், போட்டியின் போது எதிரணியின் ஒவ்வொரு பந்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

நம்நாட்டில் போட்டி நடக்கிறது என்பதற்காக அனைத்தும் நமக்கு சாதகமாக நடக்கும் எனக் கூறமுடியாது.  ஒவ்வொரு அணிக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. சிறப்பாக விளையாடி, திறமை சரியாக வெளிப்படுத்தினால், திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் நாமும் கோப்பை வெல்ல வாய்ப்புண்டு.

இளம்வீரர்கள்  பும்ரா, ஹர்திக் பான்டயா அணிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பந்துவீச்சு குறித்த கவலையில்லாமல் இப்போது இருக்கிறேன். சமீபத்திய வெற்றிகளை நினைக்கும் போது அணி சரியான தடத்தில் செல்கிறது. வீரர்கள் உடல்தகுதி மட்டுமே கவலையளிக்கும் விஷயமாகும். ஏற்கெனவே ஷமியை இழந்துவிட்டோம். எந்தவீரரும் காயம்படாமல் இருந்தால் மகிழ்ச்சிதான்.

. பேட்டிங்கில் ஏற்ற, இறக்கம் இருக்கும். ஆனால், பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.  நான் ஒவ்வொருமுறை பேட் செய்யும்போதும் மகிழ்ச்சியாகவே நினைக்கிறேன். மேட்ச் பினிஷ்சராகவே இருக்கவே விரும்புகிறேன்.

என்னைப் பொருத்தவரை மேட்ச் பினிஷர் என்பவர் கடைசிநிலை வீரராக இருக்க வேண்டும். அவர்கள் பணி வித்தியாசமானது. ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் முன்பாக நன்கு சிந்தித்து விளையாட வேண்டும் என்பதால், கடினமான பணியாகும்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மன், இன்னிங்சுக்கு அடித்தளம் அமைத்துக்கு கொடுக்க வேண்டும். ஆனால், விராத் கோலி போன்ற வீரர்கள், அவர்களே மேட்ச் பினிஷராகவும், வின்னராகவும் இருந்து பின்னால் வரும் வீரர்களுக்கு வேலையில்லாமல் செய்து விடுகிறார்கள் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply