- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சர்வதேச மகளிர் தினம் பெண்கள் சரித்திரம் படைத்திட வேண்டும் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை, மார்ச் 8-
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ‘பெண்கள்,  தங்கள் வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும்’ என்று  முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க. அரசில் அமல்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னோடி மாநிலமாக…
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல, மாதவம் செய்திட வேண்டும், அம்மா என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வாக்கிற்கேற்ப, பெண்மையின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ம் தேதி "சர்வதேச மகளிர் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பல சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருவதால், மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
சிறப்பு திட்டங்கள்
எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டிற்கும், அவர்களின் சம உரிமையை பேணிக் காத்திடவும், தொட்டில் குழந்தைத் திட்டம், முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை, தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை குழந்தையின் பெயருக்கு முன்னர் முதலெழுத்தாக பயன்படுத்துதல், மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் "குடிமகள்" என்ற சொல்லை பயன்படுத்துதல், சாதனைப் பெண்களைப் போற்றும் வகையில், வீர, தீரச் செயல் புரியும் பெண்களுக்கு "கல்பனா சாவ்லா விருது", சிறந்தப் பெண்மணிக்கு "அவ்வையார் விருது", திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் பெண்கள் திருமண உதவித் திட்டம், தாய் சேய் நலன் காக்கும் வகையில் நிதி உயர்வு அளித்து திருத்தியமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், தொடர் கல்வித் திட்டம், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பள்ளிகள், கல்லூரிகள்,
பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "அம்மா இலக்கிய விருது", பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு "அம்மா கைப்பேசி" வழங்கும் திட்டம், மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு என பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
50 சதவீத ஒதுக்கீடு
மேலும், இல்லத்தரசிகளின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப் பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக எடைக் கருவிகள் வழங்குதல், 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இணை உணவு வழங்கும் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு சட்டத்தின் மூலம் 1994-ஆம் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு என வழங்கியது, தற்போது இந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதம் என உயர்த்தியது போன்ற எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை தமிழக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக செயல்படுத்தி வருகிறது.

அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது உளங்கனிந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply