- செய்திகள், விளையாட்டு

சர்ஃப்ராஸ் அகமது கேப்டன் பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு

லாகூர், ஏப்.6:-
பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சர்ஃப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை மட்டும் வீழ்த்தி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த நாட்டின் 20 ஓவர் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில் சாஹித் அப்ரிடிக்குப் பதிலாக சர்ஃப்ராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக சர்ஃப்ராஸ் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாரியத்தின் தலைவர் சஹார்யார்கான், தான் சர்ஃப்ராஸுடன் பேசியதாகவும், அவருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்ரிடி ராஜிநாமா செய்துள்ள நிலையில், வாரியம் தனது பரிந்துரைகளை கேட்டு செயல்படவில்லை என்று தெரிவித்து அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனுஸும் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

28 வயது நிரம்பியுள்ள அகமது 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1296 ரன்களை எடுத்துள்ளார். 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1077 ரன்களை எடுத்துள்ளார். 21 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 291 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply