- செய்திகள், வணிகம்

சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை சென்செக்ஸ் 106 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை, டிச. 15:-

இந்தியப் பங்குசந்தைகள் வாரத்தின் முதல்நாளான நேற்று எழுச்சியுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை 106 புள்ளிகளும், நிப்டி 39 புள்ளிகளும் உயர்ந்தன.

அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் இன்று கூட இருக்கும் நிலையில், வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சஉணர்வு மொத்த விலைப்பணவீக்கம் உயர்வு ஆகியவைகள் இருந்த போதிலும்,  பங்குசந்தையில் நேற்று உயர்வு காணப்பட்டது.

அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி எப்போதும் இல்லாத அளவு 9.8 சதவீதம் உயர்ந்தது, நுகர்வோர்கள் மற்றும் முதலீட்டுப்பொருட்கள் விற்பனை உயர்வு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்தனர். இதனால், பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது.

30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 105.92 புள்ளிகள் உயர்ந்து,  25,150.35 புள்ளிகளில் நிலைகொண்டது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு இருந்த சரிவான புள்ளிகளில் இருந்து  நேற்று பங்குசந்தை மீண்டது குறிப்பிடத்தக்கது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 39.60 புள்ளிகள் அதிகரித்து, 7,650.05 புள்ளிகளில் முடிந்தது

பங்குசந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள், தகவல்தொழில்நுட்பம், உடல்நலம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளின் பங்குகளை பெருமளவு ஆர்வத்துடன் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டன. குறிப்பாக, ஹின்டால்கோ, டாடாஸ்டீல், வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் அதிக லாப மடைந்தன.

பங்குச்சந்தையை கணக்கிடப்பயன்படும் 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில்  19 நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும் 11 நிறுவனங்களின்  பங்குகள்  இழப்பையும் சந்தித்தன.

மேலும், மகிந்திராஅன்ட் மகிந்திரா, கோல்இந்தியா, எச்.யூ.எல்., மாருதி சுஸூகி, இன்போசிஸ், சன்பார்மா, டாக்டர்ரெட்டீஸ், விப்ரோ, பி.எச்.இ.எல்., எச்.டி.எப்.சி. வங்கி, ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

Leave a Reply