- செய்திகள், வணிகம்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தால் 2 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி மிச்சம்

புதுடெல்லி, மே 5:-

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தால் கடந்த 2 நிதி ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

அறிமுகம்
தர்மேந்திர பிரதான் இது குறித்து மேலும் கூறியதாவது:-

சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு நவம்பரில் முதல் கட்டமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் 2015 ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

2015 ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி, சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18.19 கோடியாக உள்ளது. இதில் 14.85 கோடி இணைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எஞ்சிய 3.34 கோடி இணைப்புகள் போலியானவை.

போலி இணைப்புகள்

போலி இணைப்புகள் நீக்கப்பட்டதால் கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.14,672 கோடி மிச்சமானது. அந்த ஆண்டில்  சிலிண்டருக்கு  சராசரியாக ரூ.366 மானியமாக வழங்கப்பட்டது. இதன்படி பார்த்தால் ஒரு  இணைப்புக்கு  ஆண்டுக்கு 12 சிலிண்டர் வீதம் 3.34 கோடி இணைப்புகளுக்கு  கணக்கு பார்த்தால் மொத்தம் ரூ.14,672 கோடி மானியம் வழங்குவது மிச்சமாகியுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மானியமும் குறைந்தது. அந்த வகையில் சென்ற நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி மிச்சமானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply