- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சிக்கு வரவேற்பு…

சென்னை, மார்ச் 28-
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு நடப்பதற்காக, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் டுவிட்டர், பேஸ் புக் கணக்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்துள்ளனர்.
1 கோடி இளம் வாக்காளர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்புக் குழுவினரும் வாகனச் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு புறம், சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதற்காக, ‘100 சதவீத ஒட்டுப்பதிவு 100 சதவீத நேர்மை’ என்ற முழக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் ஒரு கோடி இளைஞர்கள், இளம்பெண்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். அவர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில், இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பேஸ் புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
டுவிட்டர் பிரச்சாரம்
இதற்காக ‘டுவிட்டர்’ இணையதளத்துடன் இணைந்து @TNelectionsCEO, #TN100Percent ஆகிய இரண்டு டுவிட்டர் பக்கங்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் தொடங்கியது. இந்த டுவிட்டர் பக்கங்களுக்கு நேற்று வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து இணைந்துள்ளனர். இதேபோல், https://m.facebook.com/tnelectionsceo என்ற பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு அதில், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்கள், படங்களை தேர்தல் ஆணையம் ‘அப்லோட்’ செய்து வருகின்றது.
இந்த பேஸ்புக் பக்கத்தில் நேற்று வரை 57,847 பேர் விருப்பம் தெரிவித்து இணைந்துள்ளனர். இந்த பேஸ் புக் பக்கத்தில் வாக்காளர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உடனுக்குடன் விளக்கம் அளித்து வருகின்றார். மேலும், இந்த பேஸ் புக் பக்கத்தில் நடிகர் சூர்யா, சித்தார்த் போன்ற பிரபல நடிகர்கள், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து விளக்கி கூறும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளதால், கோடிக்கணக்கான தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை தேர்தல் ஆணையத்தின் பேஸ் புக் முயற்சி கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் பேர்
மார்ச் 4-ந் தேதி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும், புது வாக்காளர்கள் சேர்க்கைக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பல கல்லூரிகளுக்கு சென்று, பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணபித்துள்ளனர்.
புதிய வாக்காளர் அட்டை

இதுதவிர, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என 300-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களிலும், சென்னையில் அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, புது வாக்காளராக சேர விண்ணப்பிக்கும்போது, ரூ.40 கட்டணத்தை செலுத்தினால், 15 நாட்களுக்குள் ‘ஸ்பீட் போஸ்ட்’ மூலமாக புது வாக்காளர் அட்டையை வீட்டுக்கே கொண்டு வந்து தரும் வசதியையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, புதிதாக ஒரு லட்சம் பேர் வரை புது வாக்காளர்களாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave a Reply