- ஆன்மிகம், காஞ்சிபுரம், செய்திகள்

சந்தவெளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்,டிச.14

காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தவெளியம்மன் கோவில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சந்தவெளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் காஞ்சி புராணத்தில், மாதவச் சிவஞான முனிவரால் பாடல் பெற்றது. பல்லவர்காலச் சிற்பங்களை கொண்டதும் ஆகும். இத்திருக்கோவிலின் நுழைவாயிலுக்கு அருகில்,  அம்பிகை சந்தவெளி அம்மன் என்ற திருப்பெயர் தாங்கி அருள்பாலிக்கும் கோவில் ஆகும்.
உலகத்தையெல்லாம் காத்து அருள்புரியும் உலக நாயகியாகவும், உலக உயிர்களை படைத்தல், காத்தல், அழித்தல் செய்கின்ற ஆதிபராசக்தியாகவும், மழையைப் பொழிகின்ற மாரியம்மனாகவும், அந்தகப் பிராமணனுக்கு கண் கொடுத்து அருளிய வைசூரியாகவும், தேவர் மூவர்கள் துதிக்கும் அம்பிகையாகவும், பல்வேறு இடங்களில் கோவில் கொண்டு எழுந்தருளி, பல்வேறு பெயர்களை தாங்கி, தன்னை அன்போடு வந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் தந்து அருளும் அம்பிகை இத்திருக்கோவிலில் அருள்மிகு சந்தவெளியம்மன் என்ற திருப்பெயர் கொண்டு, தன்னை வழிபடுபவர்களுக்கும், வரம் வேண்டுவோர்க்கு, வேண்டுவன கொடுத்து, வாழ வைத்து மிகுந்த சக்தி உடைய தேவியாக அருள்பாலித்து வருகிறார்.
பக்தி கரகோஷம்
இப்படி பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. கோவில் அர்ச்சகர்கள் கோபுர கலசத்தின் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்களை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் 'சந்தவெளி அம்மா!' 'சந்தவெளி அம்மா!' என்று பக்தி கரகோஷம் எழுப்பினார்கள். பிறகு கும்பாபிஷேக நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Leave a Reply