- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சத்துணவு பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.1500-ஆக உயர்வு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, பிப்.20-

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது:-
அங்கன்வாடி மற்றும் சத்துணவு
ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013  முதல் எனது தலைமையிலான அரசால் உயர்த்தப்பட்டது. இந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873 பணியாளர்கள் இதனால்  பயன் பெறுவார்கள்.  இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம்  ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
பணப்பயன் உயர்வு
சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.  சமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன்  20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக்கு, வழங்கப்படும் பணப் பயன் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் எனவும்  உயர்த்தப்படும்.
பொறியியல் அலுவலர்கள்
ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள  மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை
இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப்  பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
உயர்கல்வித் துறை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை  நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்து வந்தனர்.   தற்போது இந்த ஆணையம் இல்லாத காரணத்தால், இந்த வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தான் தொடுக்கப்படுகின்றன.   அரசு அலுவலர்களின் வழக்குகளை விசாரிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் எற்படுத்தப்பட வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும்  ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply