- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சத்தீஸ்கரில் பலியான ராணுவ வீரர் விஜயராஜின் படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி குடும்பத்தினருக்கு ஆறுதல்

அம்பத்தூர், ஏப். 4- சத்தீஸ்கரில் கண்ணி வெடியில் பலியான அம்பத்தூர் விஜயராஜின் உருவபடத்திற்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் மேலவாடா கிராமத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடி தாக்குதலில் வாகனத்தில் சென்ற 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதில் ஒருவர் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜும் ஒருவர். விஜயராஜின் உடல்  அம்பத்தூர் கவிபாரதி நகர் தாமோதரன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு தரப்பினர் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு ராணுவ மரியாதையுடன் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மு.க. ஸ்டாலின் அஞ்சலி
இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள விஜயராஜ் வீட்டிற்கு சென்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது தாயார் மோகனபாக்யரதி, அவரது சகோதரர்கள் வெங்கட்ராஜ், மோகன்ராஜ் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் தெரிவித்ததாவது:-
சத்தீஸ்கர்  மாநிலத்தில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் பலியானர்கள். அதில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரும் ஒருவர். விஜயராஜ் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் சப்-இன்ஸ்பெக்டராக  பதவி உயர்வு கிடைத்தது. அந்த சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் அவர் வீர மரணமடைந்துள்ளார்.
இரங்கல் தெரிவிப்பு
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தி.மு.க. சார்பிலும், தலைவர் கருணாநிதி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply