- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க. தனித்து போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்

சென்னை, பிப்.29-
சட்டசபை தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
நலத்திட்ட உதவி
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் 178 நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
பிறந்தநாள் விழா
கேள்வி:- உங்கள் பிறந்த நாளை கொண்டாடவில்லையா?
பதில்:-நான் ஒருவார காலத்திற்கு முன்பாகவே தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஒரு செய்தியை தெளிவாக சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சர்வாதிகார, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி கொண்டிருக்க கூடிய, அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு உறுதி அளிக்கக் கூடிய வகையில், நமது தோழர்களும், பொதுமக்களும் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்பதே எனது பிறந்த நாள் செய்தி.
ஜெயலலிதா ஐந்தாண்டுகளாக எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் எப்படி தவறான, பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொண்டிருந்தாரோ, அதுபோலவே, இப்போது எதை எதையோ சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவரது ஆட்சி விரைவில் அப்புறப்படுத்தப்படும்.
ஜவடேகர் பேச்சுவார்த்தை
கேள்வி:- மத்திய அமைச்சர் ஜவடேகர் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாரே ?
பதில்:- அதுபற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
200 இடங்களில் போட்டி?

கேள்வி:- தி.மு.க. 200 இடங்களில் தனித்தே போட்டியிட வேண்டும், யாருக்கும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று சுப.வீ கருத்து தெரிவித்துள்ளாரே ?
பதில்: அது அவருடைய சொந்தக் கருத்து. அவர் தி.மு.க.வின் உறுப்பினரல்ல. தனியாக ஒரு இயக்கத்தை நடத்தி வருபவர். எனவே அது அவரது சொந்தக் கருத்து.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply