- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சட்டசபை தேர்தலில் முன்பைவிட மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும்

சென்னை, ஏப். 1-
‘‘பல அரசியல் வெற்றிகளை குவிக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. எனவே, தமிழக  சட்டசபை தேர்தலில் இதற்கு முன் பெற்ற  வெற்றிகளைக் காட்டிலும், மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும்’’ என்று ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூழ்ச்சிகள்
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தீயசக்தி கருணாநிதியின் அராஜகத்திற்கும், ஊழலுக்கும், சூறையாடலுக்கும், ஒழுக்கக்கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும்தான் முடியும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் விடுத்த அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம்தான் அ.தி.மு.க. தீயசக்தியின் கொடூரமான அடக்குமுறை, வன்முறை வெறியாட்டம் ஆகியவற்றை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து இந்த இயக்கத்தை ‘கண்ணின் மணி’ என்று காத்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நமது இயக்கத்தை அழித்துவிடத்துடித்த நம் அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சொல்லொண்ணா சூழ்ச்சிகளையும், சதிகளையும் நான் சந்திக்க நேர்ந்தது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இந்த ஒளிவிளக்கை அணையாது காக்க வேண்டும். இது என்றென்றும் மக்களின் இயக்கமாகத் திகழ வேண்டும் என்பதற்காக நான் அனைத்து சோதனைகளையும் மனஉறுதியுடன் ஏற்றுக்கொண்டு உங்களுக்காக, தமிழக மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறேன்.

லட்சியம்

எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான். தமிழக மக்களுக்காகத்தான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய இயக்கத்தை பற்றியும், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.

தமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும்தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

நன்றிக்கடன்

அ.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளை குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.  சட்டசபை தேர்தலில் இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும். அதுவே  எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்பதை கட்சியின் உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து சூளுரை ஏற்கும் தருணமாக அமைந்திட வேண்டும்.

எனது தலைமையிலான அரசு, துறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்கு தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய கட்சி நிர்வாகிகளும், கட்சி  நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும், என் உயிரினும் மேலான கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள்.

அன்புக்கட்டளை

அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும். வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள். எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் என்று உங்கள் அனைவருக்கும் அன்புக்கட்டளையிடுகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply