- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சட்டசபை தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட 27–-ந் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்

சென்னை, ஜன.20-
சட்டசபை தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் 27-ந் தேதி(புதன் கிழமை)முதல் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யலாம் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–-
விருப்ப மனு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க. தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 27–-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27-–ந் தேதி முதல் பிப்ரவரி 5-–ந் தேதி வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply