- செய்திகள்

சட்டசபையில் 23ந்தேதி 3 தலைவர்கள் படங்கள் திறப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

சட்டசபையில் 3 தலைவர்கள் திருவுருவ படங்களை வருகிற 23-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

நாட்டுக்காக உழைத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்ட கூட்டத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இந்த 3 பேர் படங்கள் திறப்பதன் மூலம் தமிழக சட்டசபையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கிறது.தற்போதுள்ள 12 தலைவர்களின் படங்கள் எப்போது திறக்கப்பட்டது, யாரால் திறந்து வைக்கப்பட்டது என்கிற விவரம் வருமாறு:-1948 ஜூலை 24-ந்தேதி தமிழக சட்டசபை மண்டபத்தில் மகாத்மா காந்தி உருவப்படம் திறக்கப்பட்டது.இதன்பின் அடுத்த ஒரே மாதத்தில், மூதறிஞர் ராஜாஜியின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதனை அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார்.

இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1964-ம் ஆண்டு மார்ச் 22-ல் திருவள்ளுவரின் படத்தை குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜாகீர் உசேன் திறந்தார்.முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் உருவப்படத்தை 1969 பிப்.10-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 5 தலைவர்களுக்கு உருவப்படங்கள் திறக்கப்பட்டன.முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவப்படத்தை 1977 ஆக.18-ல் அப்போதைய குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார், அம்பேத்கார், பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் உருவப்படங்கள் ஒரே நேரத்தில் 1980 ஆக.9-ல் திறக்கப்பட்டது. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் திறந்தார்.இதன் பிறகு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 1992 ஜன.31-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை சட்டசபையில் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கடந்த 2018 பிப்.11-ல் திறந்து வைத்தார்.இதைத் தொடர்ந்து, ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 19-ல் முதல்-அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.இப்போது வ.உ.சி., ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் திருவுருவ படங்கள் வருகிற 23-ந்தேதி, மாலை 5.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபையில் திறந்து வைக்க உள்ளார்.

Leave a Reply