- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு புகழாரம் ‘

சென்னை, பிப்.17-
‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஈடு  இணையற்ற தலைவியாகவும், எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள்  சக்தியாகவும் மக்களால் போற்றப்படுகிறார்’ என்று, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் புகழாரம் சூட்டினார். மேலும், ‘மக்கள், வருகின்ற தேர்தலிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள்’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-
மக்கள் தலைவி
தமிழக மக்களின் மீது மாறாப் பற்று கொண்டு ‘உங்களால் நான், உங்களுக்காக நான்’ என்ற உறுதியுடன், அவர்களின் வாழ்வு சிறக்க பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஈடு இணையற்ற மக்கள் தலைவியாகவும், எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாகவும், மனித உருவில் உள்ள கடவுளாகவும் மக்களால் போற்றப்படுகிறார்.  இத்தகைய ஆற்றல்மிகு தலைமையின் கீழ், நிதியமைச்சராக 5 நிதிநிலை அறிக்கைகளை இந்த சட்டசபையின் முன் வைக்கும் அரிய வாய்ப்பை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.  இத்தகைய வாய்ப்பை எனக்கு அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, வரும் மே மாதம் 5 வருடங்களை முழுமையாக நிறைவு செய்ய உள்ளது.  இந்த அரசு பொறுப்பேற்ற போது தமிழகத்தின் நிலை, குறிப்பாக, சட்டம் ஒழுங்கு எத்தகைய நிலையில் இருந்தது என்பதை நன்கு அறிவீர்கள்.  கடந்த 5 ஆண்டுகளில் அமைதியை மீண்டும் நிலைநாட்டி, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உகந்த சூழ்நிலையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.
மின்மிகை மாநிலம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தை உன்னத நிலைக்கு உயர்த்திட சிந்தனையைத் தூண்டும் வகையில், தமது புதுமையான எண்ணங்களால் மக்கள் நலத் திட்டங்களை அளித்து, எதிர்காலத்திற்கான பாதையைக் காட்டியுள்ளார்.  2011-ஆம் ஆண்டில், மாநிலத்தில் நிலவிவந்த மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினையை அவர் திறம்படக் கையாண்டதால்தான், மின் பற்றாக்குறை என்பது கடந்த கால வரலாறாகி, தமிழகம் இன்று மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது.
அவரின் தன்னிகரில்லா தலைமையாலும், உறுதியான தொடர் நடவடிக்கையாலும் மட்டுமே   காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசால் வெளியிடச் செய்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது; இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்களை, தொடர்ந்து மீட்டு வருவது; இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்தது    போன்ற பல சாதனைகளை இந்த அரசால் நிகழ்த்த முடிந்தது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ், இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமன்றி, மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தி, நாட்டிலேயே சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வரும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளது.
2,271 மீனவர்கள் விடுவிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அயராத முயற்சிகளின் காரணமாக, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 357 மீன்பிடி படகுகளுடன் 2,271 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  தரமான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான அடிப்படை அலகாக குடியிருப்புகளை வரையறுத்து, ஊரக வளர்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளார்.
இதன்படி, தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டிலேயே முதல் முறையாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் கூடிய கிராமப்புற வீட்டு வசதியை வழங்கும் வகையில், முதல்-அமைச்சரின் ‘சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம்’ வடிவமைக்கப்பட்டது.  கடந்த 5 ஆண்டுகளில், ரூ.5,940 கோடி செலவில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வருகின்ற தேர்தலிலும்…
அனைத்துத் தரப்பு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைத் தொடர்ந்து பெற்று வரும் நமது முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் பணியாற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சியைத் தந்துள்ளார். தமிழகத்தை வலிமையான, முற்போக்கான, வளமான மாநிலமாக மாற்றியுள்ளார்.  இதை முழுமையாக அறிந்துள்ள நமது மக்கள் தவறான பிரச்சாரத்தினால் ஏமாற மாட்டார்கள்.  பாலையும், நீரையும் பிரித்துண்ணும் அன்னப் பறவையைப் போல, நமது மக்களால் நல்லதையும் கெட்டதையும் தெளிவாகப் பிரித்துப் பார்க்க இயலும்.
அவர்கள் தக்க நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள்.  இந்த அரசுக்கு மக்கள் அளித்துள்ள மகத்தான ஆதரவுக்கு, என்றென்றும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.  இந்த ஆதரவைத் தொடர்ந்து அளித்து, வருகின்ற தேர்தலிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள்.
இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

பெட்டிச் செய்தி
‘ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்’
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டில் நிறைவுரையில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் நமது மாநிலத்தை வறுமை இல்லாத மாநிலமாக, அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் மாநிலமாக, எல்லாரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாத வளம் நிறைந்த மாநிலமாக, உருவாக்கிட கடந்த ஐந்து நிதிநிலை அறிக்கைகளை தன் அறிவுக்கூர்மையாலும், ஆழ்ந்த அனுபவத்தாலும் உருவாக்கி வழிநடத்தினார்.
அதுபோல் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையையும் செவ்வனே உருவாக்கி, என்னை வழிநடத்தியது என் வாழ்வில் கிடைத்ததற்கரிய பெரும்பேறாகும்.  இதற்காக அவருக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இவ்வாறு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply